ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை அணி?    

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணிக்கு 138 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்தியா அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இந்தியா அணியின் சுப்மன் கில் நிதானமாக துடுப்பெடுத்தாடி 39(37) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இந்தியா அணி பெரும் தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. 

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரியான் பராக் 26(18) ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலு சேர்த்தார். இறுதி ஓவர்களில் களத்திற்கு வந்த வாஷிங்டன் சுந்தர் 25(17) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன 3 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும், சமிந்து விக்கிரமசிங்க, அசித்த பெர்னாண்டோ, ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிக்கொண்டனர். 

தனது முதலாவது சர்வதேச டி20 போட்டியில் பங்கேற்ற சமிந்து விக்கிரமசிங்க, தனது கன்னி விக்கெட்டினை கைப்பற்றினார்.

இதற்கமைய இலங்கை அணிக்கு 138 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா அணி வெற்றியீட்டி முன்னதாகவே தொடரை கைப்பற்றியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version