ஒலிம்பிக்: ஹட்ரிக் பதக்கங்களை நோக்கி நகரும் இந்திய வீராங்கனை 

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள மனு பாகர், மகளிருக்கான 25 மீட்டர் குறிபார்த்து சுடும் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் 22 வயதான மனு பாகர் மகளிருக்கான 10 மீட்டர் குறிபார்த்து சுடும் போட்டி மற்றும் 10 மீட்டர் கலப்பு இரட்டையர் பிரிவு குறிபார்த்து சுடும் போட்டியிலும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

இந்நிலையில், அவர் பங்கேற்கும் மகளிருக்கான 25 மீட்டர் குறிபார்த்து சுடும் போட்டியின் இறுதிப் போட்டி இன்று(03.08) இலங்கை நேரப்படி பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 

இதேவேளை,  இந்தியா ஆடவருக்கான ஹாக்கிப் போட்டியில் 52 வருடங்களின் பின்னர் அவுஸ்ரேலியாவை வீழ்த்தியுள்ளது. இந்தியா ஹாக்கிப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னதாகவே தெரிவாகியுள்ள நிலையில், லீக் சுற்றின் இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலியாவை நேற்று(02.08) எதிர்க்கொண்டது. 

இந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றியீட்டியது. இதனுடாக 1972ம் ஆண்டிற்கு பிறகு ஹாக்கிப் போட்டியொன்றில் அவுஸ்ரேலியாவை இந்தியா வீழ்த்தி சாதனை படைத்தது. 

5 லீக் போட்டிகளில் பங்கேற்ற இந்தியா அவுஸ்ரேலியா உட்பட நியூசிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றியீட்டியுள்ளதுடன், அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியை சமன் செய்தது. நடப்பு சாம்பியன்களான பெல்ஜியம் அணியுடன் மாத்திரம் இந்தியா தோல்வியை சந்தித்தது.   

கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்தும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் 46வது இடத்திலுள்ளது. 

மேலும், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது. சீனா 13 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 31 பதக்கங்களை இதுவரையில் சுவீகரித்துள்ளது. போட்டிகளை நடத்தும் பிரான்ஸ் 11 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், அவுஸ்ரேலியா 11 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலுள்ளது. 

ஒலிம்பிக்: ஹட்ரிக் பதக்கங்களை நோக்கி நகரும் இந்திய வீராங்கனை 

Social Share

Leave a Reply