1.2 பில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்திய ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது – சஜித் 

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த மற்றொரு சட்டவிரோத கொடுக்கல் வாங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வி.எப்.எஸ் நிறுவனத்திற்கு விலைமனு கோரல் இல்லாமல், இணைய வீசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெற மேற்கொண்ட நடவடிக்கையால் 1.2 பில்லியன் டொலர்களை இழந்துள்ளோம். இந்தத் திருட்டை நிறுத்தி இந்த பணத் தொகையை பயன்படுத்தி பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை வழங்கியிருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததாக அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

VFS கொடுக்கல் வாங்கல் மூலம் தமது சொந்த நலனையே இந்த திருடர்கள் முன்னெடுத்தனர். ரவூப் ஹக்கீம், சுமந்திரன், சம்பிக்க ரணவக்க, அசோக் அபேசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தலைமையிலான  ஏனைய சட்டத்தரணிகளின் வலுவான வாதங்களை ஏற்றுக்கொண்டு VFS கொடுக்கல் வாங்கல் மோசடிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வாறானதொரு தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரேலியா மாவட்ட விவசாயிகள் மாநாடு இன்று(04.08)  ஹங்குராங்கெத்தையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபரை நியமித்த முறையில் காணப்பட்ட குறைபாடுகளைக் கண்டு, உயர் நீதிமன்றம் தடை விதித்த போது, ​​ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் அந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் விமர்சித்தது. VFS கொடுக்கல் வாங்கல் மூலம் 1.2 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் தடை விதித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் என்ன கூறப்போகின்றனர் என்பதை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

திருடர்களைப் பிடிப்போம் என பெரிதாக கூறிக்கொள்ளும் சிவப்பு சகோதரர்கள் VFS கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எந்த பேச்சும் இல்லை. VFS கொடுக்கல் வாங்கள் ஒப்ந்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நானே முதலில் வெளிக்கொணர்ந்தேன். இன்று பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சகோதரர்கள் திருடர்களைப் பிடிப்பதாக சொன்னாலும் திருடர்களுடன் டீல் போட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ராஜபக்சக்களுடன் கைகோர்த்து அரசியல் செய்தவர்கள் தற்போது ஒருவர் பின் ஒருவராக ஜனாதிபதியுடன் கைகோர்த்து வருகின்றனர்.  மக்களே இவர்களின் முகங்களை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.  அடைக்கலம் தேடியே ரணிலோடு இணைகின்றனர். இன்று ராஜபக்ச குலத்தை முத்தமிட்டு நாட்டையே நாசமாக்கி தரப்பினர் ஜனாதிபதியோடு கைகோர்த்து தமக்கு பாதுகாப்பான இடத்தை தேடி வருகின்றனர்.  ஐக்கிய மக்கள் சக்தியிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியிலும் இந்த திருடர்களுக்கு இடமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட நன்கொடையாளர்களின் நிதிப் பங்களிப்பில் எதிர்க்கட்சியால் முன்னெடுக்கப்பட்டு வந்த “பிரபஞ்சம்” மற்றும் “மூச்சு” திட்டங்களை இடைநிறுத்தியுள்எனர். ஆனால், மக்கள் வரிப்பணத்தால் அரச நிதியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை ஜனாதிபதி திறந்து வைக்கும் வைபவங்களை நடத்துகிறார். சட்டம் யாவருக்கும் ஒன்றுபோல் இருக்க வேண்டும். ஜனாதிபதியின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது போன்று பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காணப்பட்டு வருகிறது. 23 இலட்சம் பிளலளைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என யுனிசெப் நிறுவனமே தெரிவித்துள்ளது. இது பாரதூரமான பிரச்சினையாகும். பாடசாலை மாணவர்களின் போசாக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் ஆட்சியாளர்களிடம் இதற்கு தீர்வுகள் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

விவசாயிக்கு உரத்தைப் பெற்றுக் கொடுக்க அரசிடம் பணம் இல்லாவிட்டாலும், ஜனாதிபதியின் பொழுதுபோக்கிற்காக கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கியுள்ளனர். நாட்டின் ஜனாதிபதியே நாட்டுக்காக அதிக தியாகம் செய்து, ஆதர்சமான நபராக திகழ வேண்டும். ஆனால் இங்கு எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. இந்த கலாச்சாரத்தை மாற்ற வேண்டும்.

இன்று நாட்டை ஆள்பவர்கள் 7 நட்சத்திர ஹோட்டல்களிலும், மாளிகைகளிலும் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருவதனால், சாதாரண மனிதன் படும் துக்கங்களும் வலிகளும் அவர்களுக்குப் புரிவதில்லை. சாதாரண மக்கள் படும் துன்பங்களை தற்போதைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாது இருந்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, இந்த மாளிகை கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இந்த நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், தோட்டத் தொழிலாளிகள், அரசு ஊழியர், நடுத்தர குடும்பங்களின் பிள்ளைகள் சர்வதேச தரத்திலான தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழக பட்டங்களைப் பெறும் நிறுவனங்களாக மாற்றுவோம். ஐக்கிய மக்கள் சக்தி இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version