‘நீதியான, சுயாதீன விசாரணை வேண்டும்’ – சாணக்கியன்

முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது கடந்த 27ஆம் திகதி இராணுவத்தினர் மிலேச்சத்தனமான முறையில் திட்டமிட்ட வகையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று இராணுவத்தினர் நேற்றைய தினம் (28/11) கைது செய்யப்பட்டதுடன், பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது வெறும் கண்துடைப்பு கைதாகவே நாங்கள் பார்க்கின்றோம். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்களை பார்க்கின்ற போது, எம்முள் அச்ச உணர்வு ஒன்று தோன்றுவதுடன், நாடு இராணுவ மயமாக்கலினை நோக்கி நகர்கின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இதனை கூட்டமைப்பு என்ற வகையில் பலமுறை உரக்கச் சொல்லியிருக்கின்றோம்.

இதுகுறித்து இராணுவத்தளபதி மற்றும் அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் மௌனம் காக்கின்றமை வருத்தமளிக்கின்றது. குறித்த இருவரும் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகின்றோம். தற்போதைய அரசாங்கத்தில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. குறிப்பாக பிழைகளை சுட்டிக்காட்டுகின்ற ஊடகவியலாளர்கள் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

'நீதியான, சுயாதீன விசாரணை வேண்டும்' - சாணக்கியன்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version