பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் 

பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் 

பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளையும் முறைப்பாடுகளையும் முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்து, அவர்களின் சேவை ஒப்பந்தம் தொடர்பில் ஆராயும் அதிகாரத்தை ஆணைக்குழுவிற்கு வழங்குவது குறித்து எதிர்வரும் புதிய பாராளுமன்றத்தின் கீழ் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதேச ஊடகவியலாளர்களைப் பாராட்டும் முகமாக ‘நாடளாவிய பிரதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு’ பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று(06.08) ஏற்பாடு செய்திருந்த ‘கௌரவர்த்த ஹரசர’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.

இதன்போது பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய பிரேரணை ஒன்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பொறுப்பான கட்சிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் முறைமையொன்று நாட்டில் கட்டமைக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேர்தலை ஒத்திவைக்க தாம் ஒருபோதும் விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி தேர்தலின் போது, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு மக்களுக்கே வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

”பிரதேச ஊடகவியலாளர்கள் இன்று தமது பரிந்துரைகளை முன்வைத்தனர். தமது பிரச்சினைகளை முன்வைக்க அவர்களுக்கு சட்ட வாய்ப்பு இல்லை எனவும் கூறினர். பிரதேச பத்திரிகையாளர்கள் தமது பிரச்சினைகளையும் முறைபாடுகளையும் தெரிவிப்பதற்கான ஒரு இடம் தேவை.

பத்திரிகைச் சபைக்கு பதிலாக ஊடக ஆணைக்குழுவை நிறுவுவதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிராந்திய ஊடகவியலாளர்கள் சேவை ஒப்பந்தத்தில் இல்லை. மாறாக பொது ஒப்பந்தத்திலேயே உள்ளனர். எனவே பிரதேச ஊடகவியலாளர்களின் முறைப்பாடுகளை விசாரிக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அடுத்த பாராளுமன்றத்தில் அது குறித்து கவனம் செலுத்துவோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்ற போது, ​​நாடு எதிர்நோக்கும் நெருக்கடி இரண்டு வருடங்களுக்குள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்தக் கடமையை நிறைவேற்றிவிட்டேன். இன்று நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கப்பட்டு முன்னோக்கி கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன் அடுத்த கட்டம் எவ்வாறானது?  ஒரு நாடாக நாம் முன்னேறுவதா அல்லது மீண்டும் வீழ்ச்சியடைவதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து உடன்பாடுகளை எட்டியுள்ளோம். அந்த நிபந்தனைகளை யாராலும் நீக்க முடியாது. அந்த நிபந்தனைகளை மாற்றினால், சர்வதேச நாணய நிதியம் அதிலிருந்து விலகும். அதனால் நம் நாட்டுக்கு கிடைக்கும் பணத்தை இழக்க நேரிடும். எனவே எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். அந்த முடிவை நாட்டு மக்களிடமே விட்டுவிட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

நான் ஒருபோதும் தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை. தேர்தலை ஒத்திவைக்க போவதாக சிலர் கூச்சலிட்டனர். ஆட்சியை கொடுத்ததும் ஓடிப்போய் தேர்தல் நடத்துவதில் அர்த்தமில்லை. ஜனாதிபதி பதவியையும் பிரதமர் பதவியையும் கொடுக்க முற்பட்ட போது சிலர் ஓடி மறைந்துகொண்டனர். நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்றனர். இவ்வாறானர்கள் தேர்தலுக்கு பின்னர் தங்களால் நாட்டை செய்ய முடியாது என்று சொன்னால் நிலைமை என்னவாகும்.

இன்று நாட்டின் அரசியல் அமைப்பு சீர்குலைந்துள்ளது. பொருளாதாரம் சரிந்தபோது, ​​அரசியல் முறையும் சீர்குலைந்துள்ளது. சோவியத் பொருளாதாரம் சீர்குலைந்த போது, ​​அரசியல் முறையும் சீர்குலைந்தது. அதன் பிறகு சோவியத் ஒன்றியமும் உடைந்தது. சீனா எமக்கு முன்னதாக பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. எந்த ஒரு நாட்டினதும் பொருளாதார முறைமை சரிந்தால், அரசியல் முறையும் சரியும். ஏனெனில் பொருளாதார முறையும் அரசியல் முறையும் ஒன்றோடு ஒன்று இணைந்தே செல்கின்றன.

அரசியல் வாக்குறுதிகளை வழங்குவதும் கடன் வாங்குவதும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது. நாட்டை விற்கும் அரசியலால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது. இதனால் தான் ஒட்டுமொத்த கிழக்கு ஐரோப்பாவின் கம்யூனிச நாடுகளும் சரிவைக் கண்டன.

நமது நாட்டில் பொருளாதாரம் சரிவடைந்த போது, ​​அரசியல் முறைமையும் சரிந்தது. இன்று பங்களாதேஷில் அரசாங்கத்தை உருவாக்குவது யார்? அந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என நம்புகிறோம். ஒரு மாதமாகியிருந்தாலும் பங்களாதேஷின் மீதான நம்பிக்கையை நாம் இழக்கக்கூடாது. நாம் பங்களாதேஷுக்கு உதவ வேண்டும்.

ஒரு நாட்டின் அரசியல் அமைப்பு சீர்குலைந்தால், அதை மீண்டும் ஒன்றாக இணைப்பது எளிதல்ல. நமது அரசியல் அமைப்பு சீர்குலைந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இன்று, பொதுஜன பெரமுனவில் பெரும்பாலானவர்கள் என்னுடன் உள்ளனர் மற்றும் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் உள்ளனர்.

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்த்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்குப் பதிலாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஐக்கிய மக்கள் சக்தி வாக்களித்தது. தமிழ் கட்சிகள் பிளவுபட்டுள்ளன. அதனால் நாட்டில் சரியான அரசியல் கட்சி முறைமையொன்று இல்லையென்பது தெரிகிறது.

சிவில் சமூகத்துடன் செல்வதா அல்லது பழைய ஜேவிபி முறைமையில் செல்வதா என்பதை தீர்மானிக்க முடியாமல் ஜேவிபி இன்று பிளவுபட்டுள்ளது.

இன்று ஜேவிபியில் லெனினும் இல்லை, ஸ்டாலினும் இல்லை, விஜேவீர மட்டுமே எஞ்சியுள்ளார். விஜேவீர இல்லாமல் லெனினும் ஸ்டாலினும் இருந்தால் நல்லது என்று  நினைக்கிறேன். குறைந்தபட்சம் மார்க்ஸ் இருந்தாலும் ஏற்புடையதாக இருக்கும். இன்று மார்க்ஸ், லெனினை நீக்கிவிட்டு விஜேவீரவை இறக்கியுள்ளனர். இப்படியாகத் தான் இன்று அரசியல் முறைமை முன்னோக்கி செல்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தை சீராக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பொறுப்பான கட்சிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் முறையொன்று உருவாக்கப்பட வேண்டும். அதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தீர்மானித்தேன். இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்று நான் நம்பியதாலேயே தனியாக முன்வந்து ஆட்சியமைத்தேன். எந்த நாட்டிலும் ஒரு ஆசனத்தை பெற்ற கட்சி ஆட்சி அமைத்ததில்லை. எனவே நான் செய்திருப்பது கின்னஸ் சாதனையாகும். புதிய அரசியல் முறைமையின்றி நாடு முன்னேற முடியாது.

கடந்த காலங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.  கடந்த ஒன்றரை வருடங்களில் அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை மட்டுப்படுத்தினோம். தற்போது இந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதனால் படிப்படியாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிகிறது. நெருக்கடியால் மக்கள் அவதிப்பட்டனர். இன்னும் பிரச்சினைகள் உள்ளன. அதிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். எனவே புதிய சிந்தனையுடன் புதிய கட்சி முறைமையின் கீழ் புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ  நாணயக்கார:

”ஊடகவியலாளர்கள் இந்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பணி ஆற்றுகின்றனர். ஆனால் கடந்த காலத்தில் இந்த நாடு எதிர்கொண்ட நிலைமையை நீங்கள் அறிவீர்கள். இன்று பங்களாதேஷில் இதுபோன்ற தொடர் நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையில் அந்த போராட்டத்தை ஒரு துப்பாக்கியையும் பயன்படுத்தாமல் கட்டுப்படுத்த முடிந்தது. அன்று மக்கள் வாழ்வதற்கு எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்துகள் கேட்டனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க பாடுபட்டார். அந்த சமயத்தில் உங்கள் பிரச்சினைகளை எங்களால் தேடி பார்க்க முடியாமல் போனதற்கு வருந்துகிறோம்.

உங்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கென புதிய சட்டமூலம் தயாரிக்கப்படுகிறது. உங்கள் தொழில் கண்ணியம் மற்றும் உரிமைகளை வழங்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் உங்களுக்கு  காப்புறுதியை வழங்க 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க திட்டமிட்டுள்ளோம். பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு பிராந்திய ஊடகவியலாளர் ஒரு நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டால், அவர்களுக்கு 3 மாத காலத்திற்கு இழப்பீடு வழங்கப்படும். இந்த சட்டமூலம்  தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமா அதிபருக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தின் ஊடாகவும் ஊடகவியலாளர்களின் தொழில் உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார:

”ஊடகவியலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தமது பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நாட்டில் உள்ள அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் உங்களின் உழைப்பில் தங்கியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் எதுவும் கிடையாது. அடுத்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் போது ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதி வழங்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார். அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க எதிர்காலத்தில் பணம் ஒதுக்கப்படும்.” என்றார்.

அண்மைக்காலமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஊடகவியலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடியவில்லை. அன்றைக்கு எந்தத் தலைவரும் நாட்டைக் கைப்பற்ற முன்வரவில்லை. இன்றைய பங்களாதேஷின் நிலைமையை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அன்று ரணில் விக்ரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாக நியமிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று இந்த நாடு ஒரு இராணுவத் தளபதியின் கீழ் ஆளப்படும் நிலை ஏற்பட்டிருக்கும்.

பொருளாதார பரிமாற்றச் சட்டம், ஊடகம் தொடர்பான சட்டங்கள் அறிமுகம் செய்கையில் சிலர் அதனை பிசாசாக காட்ட முயன்றனர். ஆனால் அவை இன்று புஸ்வானமாகிவிட்டன. எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களின் தொழிற்துறையை பாதுகாக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது” என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, பிரேமநாத் சி.தொலவத்த, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version