தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நாளை தீர்வு – ஆனந்த குமார்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நாளை தீர்வு - ஆனந்த குமார்

“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக கையில் எடுத்துள்ள நிலையில்
நாளை (12.08) ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைமூலம் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளதென ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்கள் சிலருடன் இன்று (11.08.) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் அவசியத்துவம் உணர்ந்து அவருக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகிவருவதால் மலையக அரசியல் வாதிகளும் தமது முடிவுகளை மீள்பரிசீலனை செய்து ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நாடு மற்றும் மக்களின் நலன்கருதியே ஜனாதிபதி தேர்தலில் அனைத்து தரப்புகளின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக களமிறங்குகின்றார், அவரின் இந்த முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும், இது தொடர்பில் கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடான பங்களாதேஷில் அண்மையில் அராஜக நிலை ஏற்பட்டது, முழு நாடும் பற்றி எரிந்தது, நாடாளுமன்றமும் முற்றுகையிடப்பட்டது. அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் எமது நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்ற தலைவர் இருந்தால்தான் நாடு காப்பாற்றப்பட்டது. மக்கள் தற்போது நிம்மதியாக வாழும் நிலை உருவாகியுள்ளது. வரிசை யுகத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

எனவே, நாட்டில் மீண்டும் பிரச்சினை ஏற்படுவதை, வரிசைகள் உருவாவதை மக்கள் விருப்பவில்லை. ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கும் தீர்மானத்தை எடுத்துவிட்டனர். இதனால் ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகியுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிச்சயம் சம்பள உயர்வு கிட்டும், 12 ஆம் திகதி நடைபெறும் பேச்சுவார்த்தை ஊடாக இணக்கப்பாடு ஏற்படுத்தப்படும்.” – என்றார் சுப்பையா ஆனந்தகுமார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version