கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சிங்கபூர் சரக்கு கப்பலில் இன்று(11.08) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத்.டீ.பர்னாட் தெரிவித்துள்ளார்.
MSC CAPETOWN 3 எனப்படும் குறித்த சரக்கு கப்பல் நேற்று(10.08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பலில் இருந்து 995 கொள்கலன்கள் தரையிறக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவலின் போது பொட்டாசியம் காணப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொள்கலனை அகற்றியதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு துறைமுக அதிகார சபையின் தலைவருக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவுறுத்தியுள்ளார்.