பாரிஸில் நடைபெற்ற 2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி இலங்கை நேரப்படி இன்று(12.08) அதிகாலை கோலாகலமாக நிறைவடைந்தது. இம்முறை பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்ற அமெரிக்க முதலிடத்தை கைப்பற்றியது.
33வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26ம் திகதி ஆரம்பமாகியது. இம்முறை ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அணிவகுப்பு பாரிஸ் நகரில் உள்ள சீன் நதியில் நடைபெற்றது .
16 நாட்களாக நடைபெற்ற போட்டிகளின் இறுதியில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை கைப்பற்றியது. 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 126 பதக்கங்களை அமெரிக்கா சுவீகரித்தது. 2வது இடத்தை சீனாவும் (40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம்) 3வது இடத்தை ஜப்பானும் (20 தங்கம், 12 வெள்ளி. 13 வெண்கலம்) கைப்பற்றிக்கொண்டன.
போட்டிகளை நடத்தும் பிரான்ஸ் 16 தங்கம், 22 வெள்ளி, 22 வெண்கலப் பதக்கங்களுடன் 5ம் இடத்தில் ஒலிம்பிக்கை நிறைவு செய்தது. இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி 71வது இடத்தை கைப்பற்றியது. .
இம்முறை ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 6 வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். அவர்களுள் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற அருண தர்ஷன அரையிறுதி சுற்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதி சுற்றில் அருண தர்ஷன 44:75 வினாடிகளில் ஓட்டத்தை நிறைவு செய்து 5வது இடத்தை கைப்பற்றினார். 400 மீட்டர் ஓட்டத்தில் அவர் பதிவு செய்த சிறந்த நேரம் இதுவாகும்.
இருப்பினும், ஓட்டம் நிறைவடைந்து சில நிமிடங்களின் பின்னர் அருண தர்ஷன தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஓடுபாதை விதி மீறல் காரணமாகவே அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அருண தர்ஷன, கடந்த 4ம் திகதி நடைபெற்ற ஆரம்ப சுற்றில்(Heat 5) மூன்றாம் இடத்தை பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தார். இந்நிலையில், அருண அரையிறுதி போட்டியிலும் தன்னுடைய சிறந்த நேரத்தை பதிவு செய்வதற்கு முயற்சித்த போதும், ஓடுபாதை விதி மீறல் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தருஷி கருணரத்ன, மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் ஆரம்ப சுற்றின் போட்டியில் 8ம் இடத்தையும், அரையிறுதி சுற்றுக்குள் நுழைவதற்கான Repechage சுற்றில் 7ம் இடத்தையும் பெற்றுக்கொண்டார். கைல் அபேசிங்க ஆடவருக்கான 100 மீற்றர் பிரீஸ்டைல்(Freestyle) பிரிவின் ஆரம்பகட்ட போட்டியில்(Heat 4) இறுதி இடத்தை பெற்று வெளியேறியதுடன், கங்கா செனவிரத்ன மகளிருக்கான 100 மீற்றர் பேக் ஸ்ட்ரோக்(Backstroke) பிரிவின் முதல் சுற்று போட்டியொன்றில் முதலிடத்தை பெற்ற போதும், போட்டியை நிறைவு செய்வதற்கு அதிக நேரம் எடுத்தக்கொண்டதால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
இலங்கையின் இளம் பூப்பந்தாட்ட வீரர் வீரேன் நெட்டசிங்க பங்கேற்ற முதல் சுற்றில் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து வெளியேறினார். மகளிருக்கான ஈட்டி எறிதலில் முதல் சுற்றில் பங்கேற்ற இலங்கையின் தில்ஹானி லேகம்கே 16வது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
பாரிஸில் உள்ள ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழாவை 80 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நிறைவு விழாவின் இறுதியில், 2028ம் ஆண்டு அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ்சிடம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கொடி கம்பத்திலிருந்து இறக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
விழாவின் இறுதி நிகழ்வாக, எரிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு 2024ம் ஆண்டிற்கான பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.