ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் ஜானக ரத்நாயக்கவிடமிருந்து 30 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ளும் போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் பொரளையில் இன்று(14.08) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மோசடி, ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான பிரஜைகள் இயக்கத்தின் தலைவர் கமந்த துஷார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்காக இன்று(14.08) கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்தது.
கட்சியின் செயலாளர் நிஹால் பிரேமகுமார தேசப்பிரியவினால் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று(14.08) பிற்பகல் அவர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.