குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருகின்றமையால் உலக சுகாதார அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டில் 13 நாடுகளில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் ஆபிரிக்க நாடான காங்கோவில் 96 சதவீதமாக பாதிப்புகளும், மரணங்களும் பதிவாகியுள்ளன.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, காங்கோவில் குரங்கம்மை நோய் பாதிப்புகள் 160 சதவீதமாகவும், மரணங்கள் 19 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குரங்கம்மை நோயினால் இதுவரையில் 14,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 524 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெருங்கிய தொடர்புகள் மூலம் பரவக்கூடிய குரங்கம்மை தொற்று, தற்பொழுது ஆபிரிக்க நாடுகளான புருண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் அதிகளவில் பரவி வருகின்றது. ஆபிரிக்காவில் இதற்கான தடுப்பூசிகளில் தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குரங்கம்மை நோய் தொற்று ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஏனைய நாடுகளுக்கும் பரவக்கூடிய ஆற்றல் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.