இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள்

இந்தியாவின் 78வது சுதந்திர தினம் இன்று(15.08) இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற இக்கொண்டாட்டங்களின் பிரதான நிகழ்வு இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அணிவகுப்பு மரியாதையினையும் பார்வையிட்டிருந்தார். அத்துடன் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவரால் நாட்டு மக்களுக்காக ஆற்றப்பட்ட உரையின் சுருக்கங்களும் உயர் ஸ்தானிகரால் இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு கலை நிகழ்வுகள் இக்கொண்டாட்டங்களுக்கு மேலும் உயிர்ப்பூட்டியிருந்தன. இலங்கை கடற்படையின் இசைக் குழுவினர், தேசப்பற்றையும் வீரத்தையும் பிரதிபலிக்கும் மெல்லிசை மெட்டுகளை இங்கு இசைத்திருந்தனர். இதேவேளை இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் கலாச்சார உறவுகளுக்கான இந்திய பேரவையின் கலைஞர்களான ரஞ்சித் கோகோய் தலைமையிலான கலைஞர்களின் ஓர் ஆத்மார்த்தமான பிஹு நடன ஆற்றுகை விருந்தினர்களை கவர்ந்திருந்தது.

அத்துடன், இலங்கையின் சமாதானம் மற்றும் ஐக்கியத்தினை நிலை நிறுத்துவதற்காக அதியுயர் தியாகம் செய்த இந்திய படையினரை நினைவு கூரும் இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத்தூவியில் உயர் ஸ்தானிகரும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏனைய அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

இதேவேளை கண்டியில் உள்ள உதவி உயர் ஸ்தானிகராலயம் யாழ்ப்பாணத்தில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் காரியாலயம் மற்றும் அம்பாந்தோட்டையில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் காரியாலயம் ஆகியவையும் இச்சிறப்பு வாய்ந்த தருணத்தினை குறிக்கும் முகமாக பல்வேறு விசேட நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தன.

இன்று(15.08) முதல் எதிர்வரும் 18ம் திகதி வரையான நான்கு நாட்கள் நடைபெறும் பாரத் ஸ்ரீலங்கா மைத்ரி உத்சவ் 2024 கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்க பூங்காவில் இன்றைய தினம் பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது. இவ்விழாவில் இந்திய இலங்கை கலைஞர்களின் பாரம்பரிய கைவினைப் பொருட்களைக் கொண்ட கண்காட்சி மற்றும் அதனுடன் இணைந்த கலாசார நிகழ்வுகளும் உணவு கொண்டாட்டங்களும் நடைபெற உள்ளன. இவ்விழாவானது எதிர்வரும் 18ம் திகதி இரவு 10 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version