
தேர்தல் காலங்களில் அரச நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது சட்டவிரோதமான செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(21.08) தெரிவித்தார்.
ரிஷாட் பதியுதீன் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கொண்டமையால், அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியை இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணம் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தினார்.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருக்குமாறு அரச அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட அவர், சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு தலையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.