மன்னாரில் அதிபரை இட மாற்றக் கோரி போராட்டம்

மன்னாரில் அதிபரை இட மாற்றக் கோரி போராட்டம்

மன்னார் வங்காலை புனித ஆனாள் கல்லூரி தேசியப்  பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றக் கோரி இன்றைய தினம்(26.08) திங்கட்கிழமை காலை பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

“பிள்ளைகளின் கல்வியைப் பாழாக்காதே”, “ஒழுக்கம் இல்லாத உன்னால் எப்படி ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்க முடியும்?”, “ஒரு குடும்பத்திற்காக ஊரை அழிப்பதா?” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு  கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் வங்காலை புனித ஆனாள்  கல்லூரி தேசிய பாடசாலை கடந்த பல வருடங்களாகக் கல்வியிலும்,விளையாட்டு நிகழ்வுகளிலும்,ஏனைய போட்டிகளிலும் பல சாதனைகளை நிலைநாட்டி வந்த நிலையில், அண்மைக் காலமாகப் பாடசாலை சகல துறைகளிலும் கீழ் மட்டத்தை அடையும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்,

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகக் குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் நலிவடைந்து காணப்படுவதோடு, மாணவர்களின் கற்றல் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளிலும் மந்த நிலையே காணப்படுகிறது.

தற்போதைய அதிபரின் நிர்வாகத் திறனின்மையே இவ்வாறான வீழ்ச்சிக்குக் காரணம், எனவே உடனடியாக அவரை மாற்றி புதிய அதிபரை நியமிக்கும்படி நீண்ட காலமாக உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும், இதுவரை குறித்த அதிபரை மாற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தாலேயே பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் உடனடியாக குறித்த விடயம் தொடர்பாகத் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version