தேர்தல் விஞ்ஞாபனங்களின் ஊடாக பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக குற்றச்சாட்டு

தேர்தல் பிரகடனங்களில் போலி வாக்குறுதிகளை வழங்குவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதனை செய்ய முடியுமெனவும் வலியுறுத்தினார்

கண்டி பூஜாபிடிய மாரதுகொட மைதானத்தில் நேற்று (27.08) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக ஐந்தாண்டு திட்டமொன்று தன்னிடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த திட்டத்தை செயற்படுத்தி பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதோடு உணவுப் பொருட்களின் விலையை குறைத்து மக்களின் வரிச்சுமையை குறைப்பதாகவும் உறுதியளித்தார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

‘நான் வங்குரோத்து அடைந்த நாட்டையே ஏற்றுக்கொண்டேன். அப்போது வரிசை யுகமும் உரத் தட்டுப்பாடும், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவிய நாட்டையே காண முடிந்தது. ஆனால் இன்று எந்த தட்டுப்பாடும் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

அதன் அடுத்த கட்டத்தையே ஜனாதிபதி தேர்தல் தீர்மானிக்க போகிறது. அன்று வாழ முடியாத நிலைமை காணப்பட்டது. இன்று ரூபாயின் பெறுமதி வலுவடைந்தது வாழ்க்கை சுமை குறைந்துள்ளது. அதிலிருந்து முன்னோக்கி செல்வதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியே சிந்திக்க வேண்டும்.

பொருளாதாரத்தைப் பலப்படுத்தியே வாழ்க்கை சுமையை குறைத்தோம். கேஸ், எரிபொருள் விலைகள் குறைந்துள்ளன. அன்று அந்த நிலைமை இருக்கவில்லை. இந்த நிலையைப் பாதுகாப்பதா அல்லது கைவிடுவதா என்ற கேள்வியே இப்போது இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும். அவர்கள் அதற்கான வழிகாட்டல்களை வழங்குவர்.

மறுமுனையில் ஜே.வி.பி.யும் ஐக்கிய மக்கள் சக்தியும் சலுகைகயை வழங்குவதாக உறுதியளிக்கின்றன. பொருட்களின் விலையைக் குறைக்கப் போதாகவும் கூறுகிறார்கள். சலுகை வழங்குவதாகச் சொல்லிக் கொண்டு நாட்டின் வருமானத்தை குறைக்க முடியாது.

இன்று ஓரளவு மொத்த தேசிய உற்பத்தியை நாம் 90 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்து வருகிறோம். ஐக்கிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் வருமானத்தை குறைக்கும் திட்டத்தையே சொல்கிறார்கள். நாம் அஸ்வெசும, உறுமய போன்ற நலன்புரித் திட்டங்களையும் நாம் செயற்படுத்தினோம். வருமானத்தை குறைத்தால் அவற்றை செய்ய முடியாது.

அதனால் இரவில் விழுந்த குழியில் பகலில் விழ முடியாது. மக்களுக்கு நிவாரணம் வழங்கு ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்துவதே சிறந்தாகும். அவர்கள் 2022 இன் நிலைமைக்கு மீண்டும் கொண்டு செல்ல மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதற்கு பதிலளித்தால் அவர்களை நம்பலாம். என்னிடத்தில் அடுத்த ஐந்து வருட அபிவிருத்திக்கான திட்டங்கள் உள்ளன. தொழில் வாய்ப்புக்களை உருவாக்கவும் வருமானத்தை அதிகரிப்பதற்குமான திட்டங்கள் என்னிடம் உள்ளன.

ஏற்றுமதி பொருளாதாரத்தைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டத்தை கொள்கை பிரகடணத்தில் சொல்வேன். தொங்கு பாலத்தில் சென்ற பயணத்தை நிறைவு செய்வோம் என்று நாம் கூறும்போது, பாலத்தின் இரு பக்கங்களையும் வெட்டிவிடுவோம் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர். எனவே நாட்டை சுமூக நிலைக்கு கொண்டு வந்த குழுவுடன் பயணிப்பதா அல்லது சவால்களை ஏற்றுகொள்ளாமல் ஓடி ஒளிந்தவர்களுடன் பயணிப்பதா என்பதை நாட்டு மக்கள் தீர்தானிக்க வேண்டும்.

அதற்காகவே சிலிண்டரை சின்னமாக தெரிவு செய்தேன். சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version