
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் இன்று(29.08) ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா,
“சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை நாம் தொடர்ந்து முன் கொண்டு செல்ல வேண்டும்.
கடன் மறுசீரமைப்பின் ஊடாகவே அனைத்து விடயங்களும் கட்டியெழுப்பப் பட்டுள்ளன. இதனை நாம் ஒரு கட்டிடமாகக் கருதினால், கட்டிடத்தின் ஒரு அறை சிறியது என்றும் மற்றொரு அறை பெரியது எனவும் சிலர் கூறுகின்றனர்.
இத்தகைய அறைகளின் அளவுகளை மாற்றம் செய்வதில் பிரச்சினைகள் இல்லை. இருப்பினும் கட்டிடத்தின் அடித்தளத்தை மாற்றம் செய்தால் முழு கட்டிடமும் இடிந்து விழும்.
நாமும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியுள்ளோம். இதன்போது, நாம் அறைகளின் அளவுகளை மாற்றம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர்களுக்கு அறிவித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.