கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின்(CSC) ஸ்தாபக ஆவணங்களில் கைச்சாத்திடுவதற்காக இந்தியக் குடியரசின் பிரதமர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், KC 2024 ஆகஸ்ட் 29-30 ஆகிய திகதிகளில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
மொரீஷியஸில் 2023 டிசம்பரில் நடைபெற்ற CSC தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான 6ஆவது மாநாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் CSC செயலகத்தை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் சாசனம் இந்தியா, மாலைதீவு, மொரீஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளால் இன்று(30.08) கைச்சாத்திடப்பட்டிருந்ததாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்துவதில் CSCயின் முக்கிய வகிபாகத்தினை மேலும் வலுவாக்குவதில் ஸ்தாபக ஆவணங்களின் முக்கியத்துவம் குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், KC சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் ஒத்துழைப்பின் பல்வேறு காரணிகள் முழுவதிலும் ஸ்திரமான ஈடுபாட்டினை உறுதிப்படுத்துவதில் CSCயின் வகிபாகத்தினை இங்குச் சுட்டிக்காட்டியிருந்த அவர், இந்து சமுத்திர பிராந்தியத்தில் பாரம்பரிய, பாரம்பரியமல்லாத மற்றும் வளரும் கலப்பு சவால்களை முறியடிப்பதில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தியிருந்தார்.
கொழும்புக்கான இந்த விஜயத்தின்போது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் KC இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரைச் சந்தித்திருந்தார். அத்துடன் இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கா, மற்றும் மாலைதீவு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இப்ராஹிம் லதீப் உள்ளிட்ட CSC அங்கத்துவ நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அவர் கொழும்புக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த காலப்பகுதியில், எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்கா, ஏனைய அரசியல் தலைவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிராந்தியங்கள் உள்ளிட்ட பகுதிகளின் பல்வேறு அரசியல் கட்சிகளினது பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினரையும் அவர் சந்தித்திருந்தார்.