மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையில் காணப்படும் ஒப்பந்தத்தின் காரணமாகவே, ஊழலில் ஈடுபடும் ஜேவிபியினர் கைது செய்யப்படுவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நிரோஷன் பாதுக்க குற்றம் சுமத்தினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் வசந்த சமரசிங்க மற்றும் குமாரசிறி ஆகியோர் போலியான பத்திரங்களைத் தயார் செய்து, தொழிலாளர்களின் பணத்தை மோசடி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், கொழும்பில் இன்று(31.08) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தேசிய தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மற்றும் உபதலைவராக, மக்கள் விடுதலை முன்னணியின் வசந்த சமரசிங்க மற்றும் குமாரசிறி ஆகியோர் போலியான பத்திரங்களைத் தயார் செய்து, தேசிய தொழிலாளர் காங்கிரஸிற்குரிய தெஹிவளையில் உள்ள கட்டிடமொன்றைக் குத்தகைக்கு வழங்கியுள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க மற்றும் மின்சார சபையின் தொழிற்சங்கத் தலைவர் ரஞ்சன் ஜெயலால் இருவருக்குமே குறித்த கட்டிடம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தொழிலாளர் திணைக்களத்திற்கமைய தேசிய தொழிலாளர் காங்கிரஸில் வசந்த சமரசிங்க மற்றும் குமாரசிறி ஆகியோர் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலியான பத்திரங்களைத் தயார் செய்து, வசந்த சமரசிங்க ஆகியோர் மஹிந்த ஜயசிங்க மற்றும் ரஞ்சன் ஜெயலாலிடமிருந்து 36 இலட்சம் ரூபாவினைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறு பாரிய தொகையை வழங்குவதற்கு ஆசிரியரான மஹிந்த ஜயசிங்கவிடம் வருமானம் காணப்படுகின்றதா? தொழிலாளர்களின் வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் இருந்து மாதாந்தம் பெற்றுக்கொள்ளப்படும் பணமே மக்கள் விடுதலை முன்னணியினரால் திருடப்பட்டு இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வசந்த சமரசிங்க உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இத்தகைய நபர்களைக் கைது செய்யாமல் ஊழல் விசாரணை அதிகாரிகள் காலம் தாழ்த்துகின்றனர். இதனையே நாம் டீல் என்று கூறுகின்றோம். ரணில் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியனருக்கிடையில் காணப்படும் ஒப்பந்தத்தின் காரணமாகவே, இவர்கள் கைது செய்யப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.