கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதற்காக 5 வருட கால அவகாசத்தை மாத்திரமே கோருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் இன்று (01.09) காலை நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
”இரண்டு வருடங்களுக்கு முன்னர் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றி மக்கள் இருந்தனர். பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஷபக்ச விலகினார். சஜித் பதவியை ஏற்பார் என்று நாம் நினைத்தோம். முடியாது என சஜித் அறிவித்தார். மறுநாள் சரத் பொன்சேக்காவை பதவி ஏற்கப் போவதாக அறிந்தோம். ஆனால் யாரும் ஏற்கவில்லை. அதன்பின்னர் கோட்டாபய எனக்கு அழைப்பு விடுத்தார். நான் தனியாகச் சென்றேன். பொறுப்பை ஏற்குமாறு இங்குள்ள எம்.பிகள் எனக்கு தெரிவித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகிய போது எனக்கு பொறுப்பேற்ற வேண்டாம் என்றனர். அனைவரும் தப்பி ஓடினார்கள். அன்று நான் நாட்டைப் பொறுப்பேற்கவில்லையெனில், இன்னுமொரு பங்களாதேஷாக எமது நாடு மாறியிருக்கும். அந்த நிலையில் என்னை ரணில் ராஜபக்ஷ என்று அவர்கள் திட்டினார்கள். இன்று ராஜபக்ஷவினர் தனியாகச் சென்றுள்ளனர்.
பங்களாதேஷாக மாற இருந்த நாட்டை நான் மீட்டுள்ளேன். பங்களாதேஷில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டும் தேர்தல் நடத்த முடியாதுள்ளது. 29 எம்.பிகள் கொல்லப்பட்டனர். பிரதம நீதியரசர் துரத்தப்பட்டுள்ளார். அங்கு தேர்தல் நடத்த முடியாதுள்ளது. இங்கு செப்டம்பர் 21 ஆம் திகதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
இப்பொழுது தான் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே எனக்கு தேர்தலில் போட்டியிட முழு உரிமையுள்ளது தானே. தப்பியோடியவர்களை என்ன செய்யலாம்? அவர்களை மறந்து விடாதீர்கள். அவர்களுக்கு இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொடுங்கள்.
நாம் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியுள்ள நிலையில் அதனை மேலும் ஸ்தீரப்படுத்தவே நான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன். எந்தநாளும் கடன்பெற்றுக் கொண்டிருக்க முடியாது. எனவே ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்தி வெளிநாட்டு செலாவணி மிகையை ஏற்படுத்த வேண்டும். வீடு உடைந்து விழுந்தால் என்ன செய்வீர்கள். அதனை வலுவான அடித்தளத்துடன் கட்டியெழுப்ப வேண்டும். அடித்தளத்தில் உள்ள குறைபாடுகளை சீர்செய்ய வேண்டும். அதனால் தான் இப்பணிகளை நிறைவு செய்வதற்காக நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். IMF, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களினதும் 17 நாடுகளினதும் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளோம். அதில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் உள்ளடங்குகின்றன. நிலையான கட்டிடமொன்றை கட்டியெழுப்பவே நான் போட்டியிடுகின்றேன்.
5 வருடங்கள் தான் ஆட்சிப் பொறுப்பைக் கேட்கிறேன். 4 வருடத்தில் அந்தப் பணிகளை நிறைவு செய்வேன். வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் வாழ்க்கைச் செலவு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது, வரி நிவாரணம் வழங்குவது, அதிகளவில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது, பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவது,’உறுமய’, ‘அஸ்வெசும’ என்பவற்றை தொடர்வது என்பனவே எனது இலக்குகளாகும்.
2024 இல் மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. வாழ்க்கைச் செலவு மேலும் குறையும். 2019 இல் வரியைக் குறைத்ததால் உரம் இல்லாத நிலை ஏற்பட்டது. அந்த நிலைக்கு மீண்டும் செல்ல வேண்டுமா? கடந்த 4 வருடங்களாக தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அடுத்த வருடம் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவோம். ஏனைய கட்சிகள் தொழில் வழங்குவது தொர்பில் எதுவும் குறிப்பிடவில்லை. 22 ஆம் திகதி முதல் எமது திட்டங்களை செயற்படுத்த இருக்கிறோம்.
மன்னர், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசத்தை முன்னேற்ற வேண்டும். விவசாய நவீனமயமாக்கலை மேற்கொள்ள வேண்டும். மல்வதுஓய ஊடாக யோதவாவிக்கு நீர் அனுப்பிவோம். சுற்றுலாத் துறை முன்னேறினால் இப்பகுதியிலும் சுற்றுலாத்துறை முன்னேறும்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாங்குளம் போன்ற பகுதிகளில் முதலீட்டு வலயங்களை உருவாக்க இருக்கிறோம். காங்கேசன் துறையில் இருந்து ஆரம்பிக்க இருக்கிறோம். இங்கு சூரிய சக்தி உற்பத்தியை முன்னேற்றலாம். சூரிய மின் உற்பத்தியை மேற்கொண்டு இந்தியாவுக்கு விற்பனை செய்யலாம். உங்களின் வருமான வழிகளை அதிகரிக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுவோர் கடன்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். ஏற்றுமதிப் பொருளாதாரமாக எமது பொருளாதாரத்தை மாற்ற வேண்டும்.
இப்பிரதேசத்தில் காணி வழங்குவது தொடர்பில் வனவள திணைக்களம் சார்ந்த பிரச்சினை இருப்பதால் 1985 ஆம் ஆண்டு வரைபடத்தின் பிரகாரம் செயற்பட இருக்கிறோம். அவர்களை அழைத்து உங்கள் காணி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவோம். வீட்டு உரிமை வழங்க இருக்கிறோம். நடுத்தர வர்க்கத்தினருக்கு வீடுகளை நிர்மாணிக்க சலுகைக் கடன் வழங்குவோம். சஜித் ஆரம்பித்த வீடுகளுக்கும் நிவாரணம் வழங்குவோம். இவ்வாறு பணியாற்ற அநுரவினாலோ சஜித்தினாலே முடியுமா?
இந்த முன்னேற்றத் திட்டத்தை தொடரப் போகிறீர்களா, குழப்பப் போகிறீர்களா?
சிறந்த இலங்கையில் வாழ வேண்டுமா? பங்களாதேஷ் போன்று இருக்க வேண்டுமா? 21 ஆம் திகதி சிலிண்டருக்கு வாக்களிப்போம். இன்றேல் சிலிண்டரும் வெடிக்கும், நாடும் வெடிக்கும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.