வெளிநாடு செல்பவர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபடும் அரசாங்கம் – புதிய வெளிக்கொணர்வு  

வெளிநாடு செல்பவர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபடும் அரசாங்கம் - புதிய வெளிக்கொணர்வு  

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மற்றுமொரு மோசடி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெளிக்கொண்டு வந்துள்ளது.

உரியத் தகுதிகளின்றி வேலைகளுக்காக வெளிநாடு செல்பவர்களிடம், பணம் பெற்று தகுதிச் சான்றிதழ் வழங்கும் பாரிய மோசடி இடம்பெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இதனூடாக சுமார் 2 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், கொழும்பில் இன்று(21.09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் வெளிக்கொணர்ந்தார்.

இந்த மோடி தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சந்திம வீரக்கொடி,  

“கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அவை ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அனைவருக்கும் VFS விசா மோசடி தொடர்பில் தெரியும். தற்பொழுது கடவுச்சீட்டு மோசடியுடன், நாட்டினுள் கடவுச்சீட்டுக்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்களாகச் செல்லும் நபர்கள் கட்டாயமாகப் பயிற்சி சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், வெளிநாடு செல்லும் நபர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படாமல் 120,000 ரூபா பணம் பெற்றுக் குறித்த சான்றிதழ் வழங்கப்படுகின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சே இந்த மோசடியில் ஈடுபட்டு வருகின்றது.

இவ்வாறு பயிற்சியின்றி வெளிநாடு செல்லும் நபர்கள், மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், குறித்த நாட்டினால் இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட 3,000 டொலர்களை மீள உரிய நாட்டிற்கே வழங்க வேண்டும். இதனூடாக சுமார் 2 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

2 வயதை விடக் குறைந்த வயதுடைய பிள்ளைகளை உடைய பெண்கள் வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல இயலாது. இருப்பினும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு வெளியே இருக்கும் நபருக்கு 75,000 ரூபா வழங்கினால், 2 வயதை விடக் குறைவான வயதுடைய பிள்ளைகள் இல்லை எனும் சான்றிதழ் வழங்கப்படுகின்றது.

நாம் அரசாங்கத்திற்கும், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கும் இவ்வாறு சான்றிதழை வழங்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்” என அவர் தெரிவித்திருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version