ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற வடக்கு கிழக்கு பகுதிகளை மையமாகக் கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இந்த மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக, அவர்களின் வறுமையை போக்குவதற்காக மாதம் ஒன்றுக்கு 20000 வீதம் 24 மாதங்களுக்கு வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்கான சக்தியை நாம் கொடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிமித்தம் வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (01.09) யாழ்ப்பாணத்தில் விவசாயிகளையும் மீனவர்களையும் சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைக் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சேமிப்பு, முதலீடு, நுகர்வு, உற்பத்தி, மற்றும் ஏற்றுமதி ஆகிய ஐந்து துறைகளை அடிப்படையாகக் கொண்டு, மாதம் 20 ஆயிரம் ரூபா வழங்கி வறுமையை போக்க முடியும். இந்த பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் திறமையானவர்கள். அர்ப்பணிப்புடன் செயல்பட கூடியவர்கள். வட பகுதிய இளைஞர்களின் சக்தியை முழு நாட்டின் சக்தியாக மாற்ற முடியும். புதிய தொழில் நுட்பங்களின் ஊடாக அவர்களுக்கான திறமைகளை வளர்த்தெடுக்க வழி வகுத்து, இளைஞர்களை வலுவூட்டுவேன்.

பாடசாலை மாணவர்கள், தாய்மார்கள், சிறு பிள்ளைகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய தரப்பினரை இலக்காகக் கொண்டு இவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசியல் யாப்பில் பெண்களுக்கான உரிமை, சிறுவர்களுக்கான உரிமை என்பவனவற்றை மேலும் வலுப்படுத்தும் விதமாக விடயங்களை உள்ளடக்குகின்றன.

அத்தோடு, நாட்டின் தேசிய உற்பத்திக்கான பங்களிப்பை பெற்றுக் கொள்கின்ற வகையில் வடகிழக்கு பிரதேசங்களில் புதிய கைத்தொழில் நகரங்களை உருவாக்கி, இளைஞர்களின் பங்களிப்பை பெற்றுக்கொண்டு, தொழில் வாய்ப்பின்மைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். சமாதானத்தின் பிரதிபலன் வடகிழக்கு பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் எமது நாட்டுக்கும் கிடைக்கப்பெறவில்லை. அதனால் சமாதான பொருளாதாரத்தின் பிரதிபலனை உருவாக்குவோம். கடன் பொறிக்குள் சிக்கி இருக்கின்ற நாட்டையும் நுண்நிதி கடன்பொறிக்குள் சிக்கி இருக்கின்ற அவர்களையும் மீட்டெடுப்பதோடு, பெண்களை மையமாகக் கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களை வளப்படுத்துவதற்கு பாரிய நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுவோம்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version