29 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

29 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ சாரஸ் என்ற அதி போதைப் பொருளை கியூ பிரிவு பொலிசார் இன்று (02.09) பறிமுதல் செய்துள்ளனர் .

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, பீடி இலைகள், களைக்கொல்லி மருந்து, வலி நிவாரண மாத்திரைகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருகின்ற நிலையில், கடத்தலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் கியூ பிரிவு பொலிசார் மற்றும் இந்திய கடலோரப் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இன்று(02.09) இலங்கைக்கு படகு மூலம் ‘சாரஸ்’ என்ற அதிநவீன போதைப்பொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு பொலிசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கியூ பிரிவு ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையில், பொலிசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு இருந்த படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதை பொருள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 29 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பாக தூத்துக்குடி சவேரியார் புரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் உட்பட 3 நபர்களிடம் கியூ பிரிவு பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version