தாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் வரத்தின் ஊடாக மக்கள் சேவகனாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மிஹிந்தலை பிரகடனம் வெளியீட்டு வைபவம் நேற்றைய (02.09) தினம் மிஹிந்தலை ரஜ மஹா விஹாராதிபதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மகா சங்கரத்தினருக்கு மத்தியில் மிஹிந்தலை நகரில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி என்பது வரி செலுத்துகின்ற மக்களிடத்தில் தங்கி இருக்கின்ற ஒருவராகும். அதனால் அதில் சார்ந்திருப்பதிலிருந்து விலகி நிற்பேன். அந்த வட்டத்துக்குள் இருந்து வெளியேறி, புதிய சிந்தனையோடு வங்குரோத்தடைந்த நாட்டை வங்குரோத்து நிலைமையிலிருந்து கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன். நாட்டுக்கு சாதகமான விடயங்களுக்காக அந்த அதிகாரத்தை பயன்படுத்துவேன். அதன் ஊடாக நாட்டுக்கு தேவையான வளங்களையும் சுபீட்சத்தையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த விதத்திலும் மக்களுக்கு சுமையாக இருக்காது. ஒரு முன்னுதாரணமான அரசாட்சி ஒன்று நடத்தப்படும். மக்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கு முன்னர் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். தசராஜ தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு முன்மாதிரியான பணிவான செவிசாய்க்கக்கூடிய அரசாட்சி ஒன்று எமது நாட்டுக்குத் தேவை. அதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
🟩 நாட்டின் தற்காலிக பொறுப்பாளர் என்ற வகையில் மகா சங்கத்தினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்று செயற்படுவேன்.
எமது நாட்டில் அனைவருக்கும் கிடைக்கின்ற வகையில் சுபிட்சமான, அனைவரும் அனுபவிக்க கூடிய பொருளாதார அபிவிருத்தியோடு, புத்த தர்மத்தை கேந்திரமாகக் கொண்டு ஏனைய மதங்களுக்கும் பலத்தை கொடுக்கும் வகையில் ஒழுக்கமான, நியாயமான, பண்புள்ள, நாகரீகமான விழுமியங்களை பேணக்கூடிய, சமாதான விருத்தியைக் கொண்ட, வளமான நாடொன்றை கட்டியெழுப்ப கூடிய யுகத்தை உருவாக்குவோம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலோடு மக்களின் ஆசீர்வாதத்தோடு தற்காலிக பொறுப்பை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு பொறுப்பேற்று, அந்தக் காலத்தில் கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினருக்கு வழங்கிய பிரேரணைகளுக்கு அமைய செயற்படுவோம்.
அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டு மக்கள் வீழ்ந்துள்ள பாதாளத்திலிருந்து மீட்டெடுப்போம். எமது நாடு வர்த்தக ரீதியில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்துள்ளது. அனைவருக்கும் அபிவிருத்தியையும் சுபீட்சத்தையும் கொண்டு வருகின்ற நீர்ப்பாசன கலாச்சாரத்தின் ஊடாக, செழிப்பான வயல் நிலங்களுடன் கூடிய மகிழ்ச்சிகரமான வாழ்க்கை ஒன்றை எதிர்பார்க்கும் பிரகடனம் இந்த மிஹிந்தலை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. துன்பத்தில் இருக்கின்ற மக்களை துன்பத்திலிருந்து மீட்டெடுத்து சுபீட்சத்தை நோக்கி செல்வோம். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமாக உருவாகின்ற ஒற்றுமையின் ஊடாக நாட்டை வெற்றியின் பக்கம் எடுத்துச் செல்வது எமது நோக்கமாகும் .
🟩 மதங்களை மதிக்கின்ற பரம்பரை ஒன்றை உருவாக்குவோம்.
மதங்களுக்கான புனித ஸ்தலங்களை அபிவிருத்தி செய்து, நீதியும் நற்பண்புகளும் நிறைந்த பரம்பரை ஒன்றை உருவாக்கும் தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம். அதன் ஊடாக வெளிப்படுகின்ற நற்பண்புகள் சமூகத்திற்கான அறநெறி விழுமியங்களை வெளிப்படுத்தி, அந்தந்த மதங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்கின்ற நாட்டை கட்டியெழுப்பும் வேலை திட்டத்திற்கான அடித்தளத்தை முன்னெடுப்போம்.
மதத் தலைவர்களுடைய எச்சரிக்கைகள், ஆலோசனைகள், பிரேரணைகள், விமர்சனங்கள், என்பனவற்றுக்கு செவி சாய்த்து சிறந்த மனோநிலையுடன் அந்த பிரேரணைகளை நாட்டின் அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்துவோம். பல்வேறுபட்ட மக்கள் பல மதங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பலத்தை உருவாக்குவோம். பல்லின மக்கள் வாழ்கின்ற எமது நாட்டின் அபிவிருத்திக்கான பிரதான அடித்தளமான இந்த ஒற்றுமையின் ஊடாக உருவெடுக்கின்ற மிகப்பெரிய சக்தியின் மூலம் வீழ்ச்சி அடைந்துள்ள இந்த நாட்டை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுப்போம்.
விகாரைகள், தேவாலயங்கள் என அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு பெரும்பான்மையானோரின் கருத்துக்கமைய இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.