அரச ஊழியர்கள் நாட்டின் நலன் கருதி வாக்கைப் பயன்படுத்துவார்கள் – சுப்பையா ஆனந்தகுமார்

அரச ஊழியர்கள் நாட்டின் நலன் கருதி வாக்கைப் பயன்படுத்துவார்கள் - சுப்பையா ஆனந்தகுமார்

நாடும், நாட்டு மக்களும் முன்னேற வேண்டுமெனில் ஆளுமை மற்றும் அனுபவமுள்ள தலைவரொருவர் நாட்டை ஆளவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். எமது நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவ்வாறானதொரு தலைவராக இருப்பது எமது பாக்கியமாகும். எனவே, அரச ஊழியர்கள் தமது வாக்கை நாட்டின் நலன் கருதிப் பயன்படுத்துவார்கள் என நம்புகின்றோம் என ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்று பேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.  

இது தொடர்பில் ஆனந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“வங்குரோத்தடைந்த நாடொன்று குறுகிய காலப்பகுதிக்குள் மீண்டெழுவதென்பது இலகுவான விடயமாகும். அதிலும் குறிப்பாகத் தேர்தலொன்றை நடத்துவது சாதனைக்குரிய விடயமாகவே கருத வேண்டும். இவ்விரண்டு விடயங்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்து காட்டியுள்ளமை அவருக்கான வெற்றியாகும்.

இலங்கையால் மீண்டெழ முடியாது எனக் கூறியவர்களெல்லாம் எப்படி ஈராண்டுக்குள் நாடு மீண்டது என்பது பற்றி ஆராயத் தொடங்கியுள்ளனர். இதிலிருந்து ஜனாதிபதி ரணிலின் அரசியல், பொருளாதாரப் பயணப்பாதை சரியென்பது உறுதியாகின்றது. பொருளாதார மீட்பு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வும் 2025 முதல் அமுலுக்கு வரவுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனை நாம் நிச்சயம் வரவேற்கின்றோம். ஏனையோர் போல ஜனாதிபதி போலி வாக்குறுதிகளை வழங்கவில்லை. செய்யக்கூடிய விடயங்களையே தீர்வாக முன்வைத்துள்ளார்.

ஒரு நாடு முன்னேற வேண்டுமெனில் அதில் அரசாங்க ஊழியர்களின் பங்களிப்பும் அளப்பரியது. எனவே, நாட்டு நலன் கருதி அரச ஊழியர்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி நாட்டு மக்களும் நாட்டுக்காக வாக்கைப் பயன்படுத்த வேண்டும். நாட்டை மீட்ட ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பதை மறந்து விடக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version