ஜே.வி.பி யின் உண்மையான பொருளாதார கொள்கை என்னவென ஜனாதிபதி கேள்வி

ஜே.வி.பி யின் உண்மையான பொருளாதார கொள்கை என்னவென ஜனாதிபதி கேள்வி

அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுமதிப் பொருளாதாரம் பற்றி பேசும் போது சுனில் ஹந்துன்நெத்தி இறக்குமதி பொருளாதாரம் பற்றி பேசுகிறார், தேசிய மக்கள் சக்தியின் உண்மையான பொருளாதார கொள்கை என்ன என்ற கேள்விக்கு அநுரகுமார திசாநாயக்க தனது தேர்தல் மேடையில் பதில் கூற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வெலிமடையில் நேற்று (08.09) பிற்பகல் இடம்பெற்ற ”ரணிலால் முடியும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

”தேர்தல் நடத்த முடியும் என 02 வருடங்களுக்கு முன்னர் யாராவது நினைத்தார்களா? ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்த முடியும் நிலை இருந்தா?அன்று தேர்தல் நடத்தியிருந்தால் நான் மாத்திரம் தான் போட்டியிட்டிருப்பேன். ஏனென்றால் ஏனையோர் ஓடி ஒளிந்தார்கள். 2 வருடத்தின் பின்னர் இந்தத் தேர்தலை நடத்துவதால் தற்பொழுது 39 பேர்
போட்டியிடுகின்றனர். அரசியல் நிலைமை மட்டுமன்றி பொருளாதார நிலையும் சீராக்கப்பட்டுள்ளது.

ஜே.ஆர்.ஜெயவர்தன 1977 இல் பொருளாதாரத்தை மாற்றியமைத்தது போல நானும் அந்த அனுபவத்துடன் பொருளாதாரத்தை மாற்ற முன்வந்தேன். எம்மிடம் பணம் இருக்கவில்லை. பொருட்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடினேன். தாங்க முடியாத அளவு கடன் சுமை உயர்ந்திருந்தது. பொருளாதார மீட்சி செயற்பாடுகளையடுத்து 6 மாதங்களுக்குள் டொலரின் பெறுமதி குறைந்தது. அடுத்த வருடம் மேலும் நிவாரணங்கள் வழங்கப்படும். 22 ஆம் திகதி முதல் ‘இயலும் ஶ்ரீலங்கா’ திட்டத்திற்காக வாக்களியுங்கள். அதில் தான் உங்கள் எதிர்காலம் அடங்கியுள்ளது. பொருட்களின் விலைகளை குறைக்கவும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை முன்னெடுக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

04 வருடங்களாக தொழில்வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அடுத்த வருடத்தில் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும். 50 ஆயிரம் பேருக்கு தனியார் துறையில் பயிற்சி பெற்று வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளைப் பெற சந்தர்ப்பம் அளிக்கப்படும்.

வெலிமடையிலிருந்து எல்ல வரை சுற்றுலா வலயம் உருவாக்கப்படும். விவசாய நவீன மயமாக்கலின் கீழ் மரக்கறி மற்றும் பழ உற்பத்தி மேம்படுத்தப்படும். கிழங்கிற்கு வரி விதிக்கும் பிரச்சினை எழாது. தற்போதைய நிலையில் அதன் விலைகளை பேணித்தருகிறேன். பண்டாரவளையில் பாரிய குளிரூட்டி களஞ்சியசாலை உருவாக்கப்படும். ஊவாவில் விவசாய நவீன மயமாக்களுக்கு நடவடிக்கை எடுப்பேன்.

தேர்தல் விஞ்ஞாபனங்களில் சஜித்தினதும் அநுரவினதும் கருத்துக்களை பார்க்கவேண்டும். சஜித்தின் இரு தேர்தல் விஞ்ஞாபனங்கள் உள்ளன. இதில் எதனை அவர்கள் தெரிவு செய்யப் போகின்றனர். அநுரகுமார ஏற்றுமதி பொருளாதாரம் பற்றி தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு எமது பொருட்களை ஏற்றுமதி செய்வதாக தெரிவித்துள்ளார். அந்தத் திட்டத்தை வரவேற்கிறேன். அவர்களின் கொள்கை தொடர்பில் இரு பிரச்சினைகள் உள்ளன. இல்லாவிட்டால் நானும் அவருக்கு வாக்களிக்க இருந்தேன்.

ஆனால் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அவரின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை ரத்துச் செய்து எவ்வாறு ஏற்றுமதிப் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும். சுனில் ஹந்துன்நெத்தி ஏற்றுமதிப் பொருளாதாரம் நாட்டின் யாப்பிற்கு முரண் என அவர் வழக்குத் தொடர்ந்தார். இறக்குமதி பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அநுரகுமார நோய்வாய்ப்பட்டுள்ளதாக அறிந்தேன்.அவர் குணமடைய பிரார்த்திக்கிறேன். நான் முதலில் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் வழங்காத போதும் நான் யாழ்ப்பாணத்தில் முன்வைத்த கருத்துக்குப் பதில் அளித்துள்ளார்.

பிணைமுறி தொடர்பிலும் கருத்துத் தெரிவித்துள்ளார். பிணைமுறி விவகாரம் தொடர்பில் நான் தான் விசாரணை நடத்துமாறு கோரினேன். இதற்கு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. வழக்கு தொடரப்பட்டதோடு நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இந்த தீர்ப்புகள் பற்றி அவருக்குத் தெரியாதா? என நீதிமன்றம் அறிவித்தது. எனவே அவருக்கு மீள உயர் நீதினமன்றத்திற்கு சென்று மனுத்தாக்கல் செய்யலாம்.

மோசடி எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதாக அநுர தெரிவித்துள்ளார். அந்தச் சட்டம் போதுமாமனதாக இல்லை. மேலும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். தவறான வழியில் திரட்டிய சொத்துக்களை மீளப் பெற சட்டம் கொண்டுவர வேண்டும். அதனை அநுர ஆதரிக்கிறாரா? இல்லையா?

தேசிய மோசடி திட்டத்தை நாம் 2025 முதல் செயற்படுத்த இருக்
கிறோம். அதனை ஆதரிக்கிறாரா? கணக்காய்வாளரின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு அவர் உடன்படுகிறாரா? இல்லையா? சொத்து விபரங்களை இணையத்தில் பார்வையிடலாம். இதனை ஆதரிக்கிறாரா?

பணச் சலவை சட்டத்தைப் பலப்படுத்த அவர் தயாரா? உங்கள் மோசடி ஒழிப்பு செயற்பாட்டை எமது சட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்துவது ஏன்?
ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பிலும் மோசடி ஒழிப்பை ஒரு சட்டத்திற்கு மட்டுப்படுத்துவீர்களா? அல்லது அதனுடன் தொடர்புள்ள சட்டங்களை கொண்டுவரப்போகிறீரா? இதற்கு அநுர பதிலளிக்க வேண்டும். அநுர பதில் வழங்கும் வரை ஒவ்வொரு மேடையிலும் இந்தக் கேள்வியை கேட்பேன். அவர் மீண்டும் மேடைக்கு வர வேண்டும். எமது கேள்விகளுக்குப்
பதில் வழங்க வேண்டும்” என்றார் ஜனாதிபதி.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version