
‘எமது காலம்’ என்ற தொனிப்பொருளில் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் மன்னார் நகர மண்டபத்தில் கடந்த 4ம் திகதி முதல் எதிர்வரும் 11ம் திகதி வரை நடைபெற்று வருகின்றது.
‘Search for Common Ground’ நிறுவனத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட சர்வோதயத்தினால் நாடாத்தப்பட்டு வரும் இந்நிகழ்வு குறித்து சர்வோதயத்தின் மன்னார் மாவட்ட முகாமையாளர் சசிரேகா நகுலேஸ்வரன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்.
“நாம் தொன்று தொட்டு டைனோசர்களின் எலும்புக்கூடுகள் தொடர்பாகவும் பழைய மன்னர்களின் வரலாற்றினையுமே பார்த்து வருகின்றோம், தற்காலத்தில் நம் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் நாளைய வரலாறாக வேண்டும் என்ற நோக்கிலேயே ‘எமது காலம்’ என்ற தொனிப்பொருளில் இந்த வரலாற்று அருங்காட்சியகத்தை நடாத்தி வருகின்றோம்.
எமது காலத்தில் நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் எமது மாவட்டத்தின் வரலாறுகள் குறித்த பெயர்ப்பலகைகள், மற்றும் நாளாந்தம் நாம் பயன்படுத்தும் பொருட்களின் சிறப்பியல்புகள் போன்றன அனைவரும் பார்த்துப் பயனடையும் வகையில் விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த அருங்காட்சியகத்தை மன்னார் மாவட்டத்தின் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்