
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதன் படி, 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்குச் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பள அதிகரிப்பு வழங்கப்படாது என உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதற்குச் சிலர் முயற்சிப்பதாக, அநுராதபுரத்தில் நேற்று(10.09) நடைபெற்ற ஊடகசந்திப்பின் போது செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
” அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பு குறித்த ஒரு வருடத்திற்கு முன்னர் நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியுள்ளோம்.
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்திற்கு விளக்கமளித்துள்ளார். அதற்காக வருமானம் மற்றும் செலவு முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.