கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று காலை (14.9) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
2025 ஆம் ஆண்டு முதல் தேர்வுகள் மற்றும் பாடசாலை கால அட்டவணையை சீராக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
பரீட்சைகள் மற்றும் தவணைக் கால அட்டவணையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2024 ஆம் ஆண்டு கல்வியாண்டு பல சவால்களை எதிர்கொண்டதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் கல்வியாண்டில் இந்த பிரச்சினைகளை சரிசெய்வதற்கான பாதையில் கல்வி அமைச்சு தற்போது இறங்கியுள்ளதென்றும் உறுதியளித்தார்.