வட கிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாடு – சஜித்

வட கிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாடு - சஜித்

வட கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அபிவிருத்தியை கொண்டு வருவதற்கு வேறெந்த தலைவரும் செய்யாத விடயத்தை நாம் செய்வோம் என
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 57 ஆவது மக்கள் வெற்றி பேரணி கிளிநொச்சியில் நேற்று (15.09)
வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,

தாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு வடகிழக்கு மக்களை மையப்படுத்தியதாக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தை பாரிய அபிவிருத்தியின் பால் இட்டு செல்வோம். இதன் ஊடாக ஒன்பது மாகாணங்களையும்
அபிவிருத்தியடையச் செய்ய நடவடிக்கை எடுப்போம்.

ஐந்து தடவைகள் பிரதமராக இருந்த தற்போதைய பதில் ஜனாதிபதி வடகிழக்கு மக்களை சந்திக்க சென்றார். அவரினால் வடகிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள்
மாநாட்டைக் கூட்ட முடியுமாக இருந்தாலும், அதற்கான இயலுமை அவரிடம் இல்லாத காரணத்தினால் அந்த மாநாட்டை கூட்டவில்லை.
ஐக்கிய மக்கள் சக்திக்கு இயலுமை இருக்கின்றது.

ஓய்வூதிய முரண்பாடுகளைத் தீர்த்து சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்பட்ட 15 வீத வட்டியை மீண்டும் பெற்றுக் கொடுப்போம்.
வீடமைப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம். கோட்டாபய ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் வீடமைப்பு திட்டத்தை நிறுத்தினாலும் தாம் அதிகாரத்திற்கு வந்த உடனே
உதா கம்மான திட்டத்தை நிறைவு செய்து அதனை மக்களிடம் கையளிப்போம்.

விவசாயிகளுக்கு 5000 ரூபாவுக்கு 50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை வழங்குவோம். மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை வழங்குவோம்.
விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் தொடர்ந்து இந்த நிவாரணங்களை வழங்குவோம்.
செல்வந்தர்களுக்கு இந்த நிவாரணங்கள் தேவைப்படுவதில்லை. மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்குமே இந்த நிவாரணம் பெறுமதியாக அமைகின்றது.

இளைஞர் சமூகத்துக்காக இளைஞர் தொழில்நுட்ப மத்திய நிலையங்களை உருவாக்கி, அதன் ஊடாக தகவல் தொழில்நுட்பம்,
கணிணி விஞ்ஞானம் ஆங்கில மொழி கல்வி, தொழில் உருவாக்கம் போன்றவற்றை சர்வதேச தரத்தில் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
தொழில் வாய்ப்பில்லாத இளம் தலைமுறையினருக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வறுமையை ஒழிக்கின்ற நோக்கில் 24 மாதங்களுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். முதலீடு, உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு மற்றும் ஏற்றுமதி
ஆகிய ஐந்து திட்டங்களின் கீழ் மாதமொன்றுக்கு 20,000 ரூபா வீதம் வழங்கி வறுமையை ஒழிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version