IMF இன் ஆதரவு சஜித்துக்கோ அனுரவுக்கோ இல்லை – ஜனாதிபதி

IMF இன் ஆதரவு சஜித்துக்கோ அனுரவுக்கோ இல்லை - ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துள்ள ஒப்பந்தங்களை பாதுகாப்பது அத்தியாவசியமானது எனவும் சஜித் மற்றும் அநுர கூறுவது போன்று அந்த உடன்படிக்கைகளை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

ஹொரணை பொது விளையாட்டரங்கில் நேற்று பிற்பகல் (15.09) இடம்பெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க வேண்டும் என்பதே எனது முதல் நோக்கம். சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் இல்லாமல், எங்களுக்கு உதவ வேறு யாரும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் காரணமாக எங்களுக்கு 18 நாடுகளின் ஆதரவு கிடைத்தது. மேலும், நாம் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டியை செலுத்துவதில் 10 பில்லியன் டொலர்கள் நன்மையைப் பெறுகிறோம்.

இந்த நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். எங்களால் எப்போதும் கடன் வாங்க முடியாது. ஏற்றுமதி வருமானத்தை விட நமது இறக்குமதி செலவு அதிகம். எனவே, நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்க, ஏற்றுமதி பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும். பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதன் மூலம் நாம் முன்னேற வேண்டும். நிவாரணங்களை வழங்குவதன் மூலம் ஒரு நாட்டை முன்னேற்ற முடியாது.

ஐ.தே.கவின் வெற்றிக்காக பங்காற்றியவர்களில் நான் மட்டும் தான் எஞ்சியுள்ளேன். எனவே கட்சியை பாதுகாக்கும் பொறுப்பு எனக்குள்ளது. ஐமசவில் எவருக்கும் ஐதேக பற்றிப் பேச எந்த உரிமையும் கிடையாது. சஜித்தை அரசியலுக்கு கொண்டு வந்தது நான் தான் .பிரேமாஸ அல்ல. அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கியதும் நான் தான். நாம் அனைவரும் நாட்டுக்காக ஒன்று பட்டுள்ளோம். எனவே ஐதேக ஆதரவாளர்கள் எம்முடன் இணைய வேண்டும்.

ஆனால் தற்போது இலங்கை வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக இந்த வேலைத்திட்டத்தின் நோக்கங்களை அடைவது மிகவும் முக்கியமானது என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. அதாவது நான் தொடங்கிய திட்டத்தை தொடர வேண்டும். எனவே இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல என்னால் மட்டுமே முடியும்.

“அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவை இலங்கை மக்களே எடுக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் பார்வையில், இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதை நாம் கண்டோம். இலங்கை தனது வரலாற்றில் சந்தித்த மிக மோசமான நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பெற்ற வெற்றியை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது” என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சஜித்துக்கோ அல்லது அனுராவுக்கோ சர்வதேச நிதியத்தின் ஆதரவைப் பெறமாட்டார்கள். அந்த ஆதரவு எங்கள் திட்டத்திற்கு உள்ளது. எனவே இவர்களது பொய்களில் சிக்கி இரவு விழுந்த குழியில் பகல் விழப் போகிறோமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

எனவே, நாட்டின் பொருளாதாரத்தையும், உங்கள் எதிர்காலத்தையும் காக்க, கேஸ் சிலிண்டருக்கு செப்டம்பர் 21 ஆம் திகதி வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version