வேலைத்திட்டங்களுடன் மன்னாருக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில்

வேலைத்திட்டங்களுடன் மன்னாருக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில்

மன்னாரில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே மன்னாருக்கு வருகை தந்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மன்னார் நகரப் பகுதியில் இன்று(17.09) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மன்னாரில் பாரிய வளமுள்ளது அதில் ஒன்று சூரிய சக்தி முக்கியமானது. அதனை நாம் முழுமையாகப் பயன்படுத்துவோம். மன்னாரைச் சூரிய சக்தியின் மத்திய நிலையமாக மாற்றுவோம்.

மன்னார் கடலிலிருந்து நல்ல காற்று வீசுகிறது, அதனையும் பயன்படுத்துவோம், அந்த சக்தி இந்தியாவிற்கும் தேவைப்படுகின்றது. இங்கு வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் நன்கு வாழ வழி செய்வோம், மன்னாரில் சிங்கள கிராமங்களில் வாழும் மக்கள் எதுவித அச்சமுமின்றி வாழ முடியும். சிங்கள கிராமங்களில் 5 பௌத்த விகாரைகள் உள்ளன அவற்றையும் நாம் பொறுப்பேற்போம்.

“புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சிப்போம். மன்னாரை மேம்படுத்தி மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு புதிய பாதை ஒன்றை அமைப்போம், கமத்தொழிலை ஊக்குவிப்போம், இவையெல்லாம் செயற்படுத்த எம்மால் முடியும். 21ம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள்” எனத் தெரிவித்தார்.

குறித்த பிரச்சாரக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான், சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கே.திலீபன், முஷராப், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட அரசியல் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version