ஜனாதிபதி தேர்தல் இறுதி தருணத்தை எட்டியுள்ள நிலையில், மக்களுக்கு இரண்டு தெரிவுகளே மீதமிருப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(17.09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த டலஸ்அழகப்பெரும,
“தேர்தலுக்கு சில மணித்தியாலங்கள் மீதமிருக்கின்ற நிலையில், எமக்கு இரண்டு தெரிவுகளே காணப்படுகின்றன. ஜனநாயகமா அல்லது மாக்சிசவாதமா என்பதே மீதமிருக்கும் தெரிவுகள். ஜனநாயக சுதந்திரமா அல்லது தீவிரவாதமா?
விமர்சிக்கும் சுதந்திரம், எதிராக நிற்கும் சுதந்திரம், மனித சுதந்திரம், வாழும் சுதந்திரம், பேசும் சுதந்திரம் போன்ற சுதந்திரங்களை விரும்பும் மக்கள் ஜனநாயகத்தின் பின்னால் நிற்க வேண்டும்.
நாம் எம்முடைய நாட்டின் பாதுகாப்பு தரப்பினரிடமும், பொலிஸாரிடமும் வேண்டுகோளொன்றை முன்வைக்கின்றோம். தேர்தலில் வெற்றி பெற இயலாது என நன்கு தெரிந்துகொண்ட தரப்பினர், இறுதி தருணத்தில் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்கு இடமிருக்கின்றது” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.