அண்மையில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளிலிருந்து மூன்று வினாக்கள் கசிந்தமையினால், குறித்த வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளைக் கணக்கிடுவதற்குப் பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரீட்சைத் திணைக்களத்திற்கு முன்பாக பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யுமாறும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகச் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்குப் பரீட்சைத் திணைக்களத்திற்குள் சென்று, தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தினை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோர்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்ற நிலையில், குறித்த இடத்திற்கு பொலிஸாரும், கலகத்தடுப்பு பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளிலிருந்து வினாக்கள் கசிந்த விடயம் தொடர்பில் பரீட்சை ஆணையாளர் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை எனவும், அவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அங்கிருந்த பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான போராட்டங்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 15ம் திகதி இடம்பெற்றது.
இந்நிலையில், குருநாகல் – அலவ்வ பகுதியில் மேலதிக வகுப்புகளை நடத்தி வரும் ஆசிரியர் ஒருவரால், புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளிலிருந்த மூன்று வினாக்களுக்கு நிகரான வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள் பரீட்சை திகதிக்கு முன்னர் பகிரப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பரீட்சை திணைக்களம், குறித்த மூன்று வினாக்களையும் நீக்கி இறுதி புள்ளிகளை வழங்குவதற்கு நேற்று(17.09) தீர்மானித்திருந்தது.
தற்பொழுது, இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.