அனைத்தும் ‘இயலும்’ என்று கூறும் தலைவரே காலத்தின் தேவை – தலதா

அனைத்தும் 'இயலும்' என்று கூறும் தலைவரே காலத்தின் தேவை - தலதா

“பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபோய்விடுவார்கள் என்பதே பலரினதும் நிலைப்பாடு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” நான் 20 வருட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுவிட்டு நாட்டுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தேன். 2022 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றிருக்காவிட்டால் இன்று நாடு இந்த நிலையில் இருக்காது.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்த போது ரணில் ஆட்சி நீடிக்காது என்றும், ரணில் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலை நடத்தமாட்டார் என்றும் பல விடயங்களைக் கூறினர்.

ஆனால், அவை அனைத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொய்யாக்கியுள்ளார். அவர் ஒருபோதும் ராஜபக்‌ஷர்களிடமிருந்து எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

இன்னும் சிலர் வெல்லும் சஜித் என்று சொல்கிறார்கள். ஆனால் நாட்டில் அனைத்தும் ‘இயலும்’ என்று சொல்லும் தலைவரே எமக்கு தேவைப்படுகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இடைக்கால ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்த பணிகளை முழுமைப்படுத்தவே இன்னும் ஐந்து வருடங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கோருகிறார்.

எனவே, இந்த நாட்டில் நீண்ட காலம் மக்கள் தேவைகள் தொடர்பில் அறிந்துகொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஆட்சியை ஒப்படைப்பதே காலத்தின் தேவையாகும்.

எதிர்கட்சித் தலைவர் சந்திக்கு சந்தி வாக்குறுதிகளை வழங்குகிறார். அவரின் மேடைக்குள்ளே மோதல்கள் காணப்படுகின்றன.

நான் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நான்கு வருடங்கள் விலகியிருந்தாலும் எமது தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையே நினைத்திருந்தோம்.

அன்று ரணில் – ராஜபக்‌ஷ என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள்
சஜித் – ராஜபக்‌ஷவாக தற்போது மாறியுள்ளமை வேடிக்கையானது” என்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version