கொழும்பு தர்மஜயதன விகாரைக்கு புத்த பெருமானின் சிலை கையளிப்பு

கொழும்பு தர்மஜயதன விகாரைக்கு புத்த பெருமானின் சிலை கையளிப்பு

பினாரா போயா தினம் மற்றும் ஶ்ரீமத் அநகாரிக தர்மபால அவர்களின் 160வது பிறந்த தின நினைவுநாளை முன்னிட்டு கடந்த 17ம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் கொழும்பிலுள்ள தர்மஜயதன விகாரைக்கு தர்மச்சக்கர முத்திரையுடனான புத்தர் சிலையொன்றை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கையளித்திருந்ததுடன், இந்நிகழ்வில் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன பிரசன்னமாகியிருந்தார்.

நான்கு அடிகள் உயரமும் 330 கிலோ நிறையினையும் கொண்ட இந்தச் சிலையானது பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் கோரிக்கைக்கு அமைவாகக்  கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேரவையினால் விசேடமாக வழங்கப்பட்டதாகும். தர்மஜயதனய விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய எல்லே குணவன்ச தேரரிடம் இச்சிலையானது கையளிக்கப்பட்டதுடன், புத்த பெருமான் தர்மச் சக்கர முத்திரையை காண்பித்தவாறாக இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. புத்த பெருமான் ஞானம் பெற்ற பின்னர் சாரநாத்தில் உள்ள மான் பூங்காவில் தனது முதல் பிரசங்கத்தினை நிகழ்த்திய முக்கிய தருணத்தினை குறித்த முத்திரை பிரதிபலிக்கின்றது. அத்துடன் தம்மத்தின் சுழற்சிக்கான இயக்கத்தினையும் இது குறித்து நிற்கின்றதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மஜயந்தனய விகாரையின் வளாகத்தில் மர நடுகை நிகழ்வொன்றும் நடைபெற்றிருந்து. #Plant4Mother திட்டத்தில் இணையும் வகையில் பிரதமர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோர் “இத்தா” மரக் கன்றுகளையும் இங்கு நாட்டிவைத்தனர். புது டில்லியில் உள்ள புத்த ஜயந்தி பூங்காவில் 2024 உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரச மரங்களை நாட்டி இத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார், முன்னதாக இத்திட்டத்தின் கீழ் இலங்கை இந்தியப் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம், 2024 ஒகஸ்டில் ஶ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள தேசிய சந்தனப் பூங்காவில் முருதா மரக்கன்றுகளை நாட்டி இலங்கை இந்திய நட்புறவு வளைவு ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்து.

இந்நிகழ்வானது இந்தியா இலங்கை இடையிலான பகிரப்பட்ட பௌத்த மரபினை வலியுறுத்துகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரீகப் பிணைப்பினை மேலும் வலுவாக்கும் நோக்குடன் 2020 செப்டெம்பரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பௌத்த உறவுகளின் மேம்பாட்டுக்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை உதவியினை அறிவித்திருந்தார். அத்துடன் விசேட நன்கொடை உதவியின் கீழ் முதல் திட்டமாக, இலங்கை முழுவதும் உள்ள 9000 பௌத்த விகாரைகள் மற்றும் பிரிவேனாக்களை உள்ளடக்கும் வகையில் சூரியக்கல மின் மயமாக்கல் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல், இலங்கையில்  உள்ள 4000க்கும் மேற்பட்ட புத்த விகாரைகள்  மற்றும் பிரிவேனாக்களுக்கு 17 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி மூலம் சூரியக்கல மின் மயமாக்கல் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவிலிருந்து புனித கபிலவஸ்து மற்றும் சாரநாத் புனித சின்னங்கள் இலங்கையில் தரிசனத்துக்காக வைக்கப்படும் நிகழ்வுகளும் அண்மைய காலங்களில் நடைபெற்றன. மேலும், இந்தியாவில் உள்ள பௌத்த வளாகங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும்  இலங்கை யாத்திரிகர்களுக்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கிவருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த தொடர்பை மேலும் வலுவாக்கும் வகையில் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், உதவி உயர் ஸ்தானிகராலயம், கொன்சுலேட் ஜெனரல் காரியாலயங்கள் மற்றும் சுவாமி விவேகானந்தர் கலாச்சார நிலையம் ஆகியன பல பணித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையில் இந்த ஆண்டு முழுவதும் ஒவ்வொரு போயா தினத்தன்று வெவ்வேறு விகாரைகளிலுமுள்ள  பௌத்த வளாகங்களில் நடத்தப்படும் நடமாடும் புகைப்படக் கண்காட்சிகள், இலங்கை முழுவதும் உள்ள பிரிவேனாக்களுக்கு வளங்களை வழங்குவதன் மூலமான கல்வி உதவி போன்ற  இன்னும் பல செயற்பாடுகள் இதில் உள்ளடங்குகின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version