நேற்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசார கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தற்போது அமைதி காலம் அமுலில் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி வரை இந்த அமைதி காலம் நடைமுறையில் இருக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் தேர்தல் பிரசாரம், பேரணி, துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், எந்தவொரு வாக்காளரையும் குறிப்பிட்ட நபருக்கு வாக்களிக்குமாறு அல்லது தேர்தலைப் புறக்கணிக்குமாறு அச்சுறுத்தல் விடுக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
அவ்வாறான ஏதேனும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.