மன்னார்: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

மன்னார்: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

ஜனாதிபதி தேர்தல் நீதியாகவும்,சுதந்திரமாகவும் நடை பெறுவதற்குச் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (20.09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மன்னார் மாவட்டத்தில் 90,607 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இன்றைய தினம் (20.09) மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்து, மாவட்டத்தின் 98 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நிலையமான மாவட்டச் செயலக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 64 பொலிஸாரும், 47 விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.மேலும் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவுக்கு 11 பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்களிலும் 2 பொலிஸார் வீதம் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிறைவடைந்தவுடன் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு என்னும் நிலையத்திற்கு எடுத்து வரும் போது பொலிஸார் வீதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்தல் வன்முறைகள் குறித்து எதுவித முறைப்பாடுகளும் எமக்குக் கிடைக்கவில்லை. சாதாரண சட்ட மீறல்களுடன் தொடர்புடைய 28 முறைப்பாடுகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றன. குறித்த முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விழிப்புலனற்றோர், தங்களுக்குத் தெரிந்த ஒருவரை அழைத்துச் சென்று வாக்களிக்க முடியும்” என மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.  

இந்த ஊடகச் சந்திப்பின் போது மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் வி.சிவராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version