புதிய ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் வாழ்த்து

புதிய ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் வாழ்த்து

“இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் ஆணையோடு தேர்வாகியுள்ள,தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கு ஜனநாயக மாண்புடன் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில்,

“அமைதியும் நீதியுமான தேர்தல் ஒன்றில், ஆரோக்கியமான போட்டியை முன்னிறுத்தி இலங்கை மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கமைய உங்கள் வெற்றியை நீங்கள் உறுதி செய்துள்ளீர்கள்.

மாற்றம், நீதியான ஆட்சிமுறை, ஊழலற்ற அதிகார கட்டமைப்பு உள்ளிட்ட உங்களது எண்ணங்களின்மீது மக்கள் தமது திடமான நம்பிக்கையை வைத்துள்ளார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

புதிய அரசியல் பாதையை இலங்கை நாட்டுக்கு உங்கள் வெற்றியூடாக உருவாக்கியுள்ளீர்கள். இந்த வெற்றிக்காக உங்களோடு பங்காற்றிய கட்சியினர், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த நாடு கடந்து வந்துள்ள அரசியல் கலாச்சாரத்தில், இந்நாட்டின் இனங்கள் மீதான பாகுபாடு தீர்க்கப்படாமல் அவை தேர்தல் வெற்றிகளுக்காக காலங்காலமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

எங்கள் மக்களின் உரிமைகள், பெறப்படவேண்டிய நீதிகள், அதிகார பகிர்வுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை கட்சியரசியல் தாண்டி நாட்டு மக்களனைவருக்குமான ஜனாதிபதியாக நேர்மையுடன் கையாண்டு நல்லதோர் மாற்றத்தை எங்கள் மக்களுக்கு வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

ஜனாதிபதி தேர்தலின் பிரச்சார காலங்களில் நீங்கள் விடுத்த கோரிக்கையை, தேர்தல் முடிவுகளில் வடக்கு கிழக்கு மக்கள் நிராகரித்தனர் என்று எடுத்துக்கொள்ளாமல், உங்கள் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அவையூடாக பெற்றுக்கொடுக்கப்படும் தீர்வுகள் ஊடாக எதிர்காலத்தில் மாற்றமொன்றை அவர்கள் மனங்களிலும் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

நீண்டகால உரிமைசார் பிரச்சனைகளோடு, உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய அபிவிருத்தி, பொருளாதார தீர்வுகளுக்காகவும் வடக்கு மக்கள் காத்திருக்கிறார்கள்.அவற்றையும் உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

2022 ஆம் ஆண்டுக்குப் எ பின்னர் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியை தென்னிலங்கை மக்கள் எதிர்கொண்டதைப்போன்று, நாட்டின் கடந்தகால வன்முறைகள், யுத்தங்களினால் பொருளாதார, அபிவிருத்திசார் பின்னடைவுகளை பல ஆண்டுகாலமாக வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொண்டுள்ளனர். அவற்றையும் சமாந்தரமாக தீர்க்க வேண்டும் என நாம் நாட்டின் ஜனாதிபதிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம்.

நாட்டினதும் மக்களினதும் எதிர்கால நலனுக்காகவும் ஓர் சிறந்த அரசியல் கலாச்சார மாற்றத்துக்காகவும் தாங்கள் முன்வைத்துள்ள கொள்கைத்திட்டத்தினூடாக முன்னெடுக்கும் செயற்பாடுகள், சரியாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் எமது ஒத்துழைப்பும், மக்களின் ஆதரவும் தங்களுக்கு கிடைக்கும் என்ற செய்தியையும் இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, தங்களது ஜனாதிபதி ஆட்சிப் பதவிக்காலத்துக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version