ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு விளக்கமறியல்

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு விளக்கமறியல்

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ப்ரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க, அச்சலா வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலத்திரனியல் முறையில் விசா விநியோகிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவிற்கமைய செயற்படத் தவறியமையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலத்திரனியல் விசா வழங்கும் செயன்முறை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையை இரத்து செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறி நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனங்களுக்கு விசா வழங்கும் செயன்முறை வழங்கப்பட்டதன் ஊடாக முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களால் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த மனுக்களின் அடிப்படையில் குறித்த தீர்மானத்தை இரத்துச் செய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த போதும், அதனை நடைமுறைப்படுத்த தவறியதாக குடிவரவு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மனுக்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version