மன்னார் புதிய மதுபான நிலையத்தை மூட மதுவரி ஆணையாளர் உத்தரவு

மன்னார் புதிய மதுபான நிலையத்தை மூட மதுவரி ஆணையாளர் உத்தரவு

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபான நிலையத்தை மக்களின் எதிர்ப்பு காரணமாகத் தற்காலிகமாக மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

குறித்த மதுபான நிலையத்திற்கு எதிராக நேற்று (30.09) மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

மதுபான நிலையத்திற்கருகாமையில்  மக்கள் குடியிருப்பு , ஆடைத்தொழிற்சாலை, இளைஞர் பயிற்சி நிலையம், மதஸ்தலம் ஆகியவை அமைந்துள்ளமையால், அதனை மூடுமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது, சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் மற்றும் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக அரச அதிபர் உடனடியாக மதுவரி திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்ற நிலையில் குறித்த மதுபான நிலையத்தைத் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்று மதுபான நிலையத்தை நிரந்தரமாக மூடுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version