டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 500க்கு அதிகமான ஓட்டங்களைப் பெற்றும், போட்டியில் தோல்வியடைந்த முதல் அணியாகப் பாகிஸ்தான் பதிவாகியது.
பாகிஸ்தான், முல்தானில் இன்று(11.10) நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த பாகிஸ்தான் அணி, போட்டியின் முதல் இரு நாட்களில் 556 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பின்னர், முதல் இன்னங்ஸிற்காக துடுப்டுத்தாடிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 823 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது துடுப்பாட்டத்தை நிறுத்தியது.
இதன்போது ஹாரி புரூக் 317 ஓட்டங்களையும், ஜோ ரூட் 262 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இருவரும் 4வது விக்கெட்டுக்காக பெற்றுக்கொண்ட 454 ஓட்டங்கள் சாதனையாகப் பதிவாகியது.
267 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் சொந்த மண்ணில் கடந்த 11 போட்டிகளிலும் வெற்றியீட்டவில்லை. இதில் 7 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், மீதமுள்ள 4 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்தன.