இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் நேற்று(12.10) கைது செய்யப்பட்ட 126 சீன பிரஜைகள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளன. கண்டி, குண்டசாலையில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சுற்றுலா விடுதியின் நிர்வாக அதிகாரிக்குத் தெரிந்தே, விடுதியின் தனியான பகுதியொன்றை முன்பதிவு இணையவழி நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த சில தினங்களாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த 6ம் திகதி ஹன்வெல்ல பிரதேசத்தின் இரு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து பிரஜைகளும், கடந்த 7ம் திகதி நாவல பிரதேசத்தில் 19 சீன பிரஜைகளும், கடந்த 10ம் திகதி பாணந்துறையில் 20 சீன பிரஜைகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக, 17 பெண்கள் உட்பட 126 சீன பிரஜைகள் கண்டி – குண்டசாலையில் உள்ள சுற்றுலா விடுதியில் வைத்து நேற்று(12.10) கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த விடுதியிலிருந்து 120 மடிக்கணினிகள், 14 கணினிகள் மற்றும் 300ற்கு மேற்பட்ட கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கண்டி பொலிஸார் உட்படப் பல பொலிஸ் குழுக்கள் இணைந்து நடத்திய அதிரடி சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது, பல சீன பிரஜைகள் விடுதியின் பின்னால் உள்ள மகாவலி கங்கை ஊடாக தப்பி ஓடியதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் கடந்த செப்டம்பர் 30ம் திகதி விடுதியின் 47 அறைகளை முன்பதிவு செய்ததோடு, அவர்கள் தங்கியிருந்த பகுதியிலுள்ள நீச்சல் தடாகம் உட்பட முக்கிய அறைகளை, விடுதி ஊழியர்கள் மற்றும் வெளி நபர்கள் நுழைய முடியாதவாறு பயன்படுத்தியுள்ளதாகச் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய விடுதி நிர்வாகத்தினருக்குத் தெரிந்தே இணையவழி நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், இரு தரப்பினருக்கும் இடையே தகவல் பரிமாற்றத்துக்குச் சீன மொழி பெயர்ப்பாளர் பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 8 நாட்களுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தங்கியிருந்த சீன பிரஜைகள், முதல் 8 நாட்களுக்கு 46 இலட்சம் ரூபா செலுத்தியுள்ளனர்.
நேற்று(12.10) கைது செய்யப்பட்டவர்களுள், அண்மையில் ஹம்பாந்தோட்டையில் இதே போன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்ற 26 சீன பிரஜைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.