எந்த ஒரு தமிழ்த் தலைமைகளும் இஸ்லாமியக் கிராமங்களுக்குச் சென்றதில்லை. ஆனால் நான் சென்றிருக்கிறேன். மதம், இனம் கடந்து இளைஞர்கள் என்னை நேசிக்கிறார்கள் எனத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி செ. டினேசன் தெரிவித்துள்ளார்.
மன்னார் தனியார் விடுதியொன்றில் கடந்த 17ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பான இளைஞர்களுக்கான ஒன்றுகூடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது கரங்கள் கறைபடிந்த கரங்கள் அல்ல. மக்களுக்கு உதவிபுரிந்த கரங்கள். மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கிலேயே எனது தொழிலையும் கருத்திற் கொள்ளாது ஓடிக்கொண்டிருக்கிறேன்.
இனம், சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்கின்ற கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். மாற்றம் என்பது இனம்,மதம், சாதி அடிப்படையில் அரசியல் செய்வதல்ல.
வன்னியில் இளைஞர்களுடன் இணைந்து மக்களுக்கு ஏற்றவாறு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எம்மக்களுக்காக நாம் பேசாது விட்டால் யார் பேசுவார். அரசியலில் இளைஞர்கள் எவ்வாறு பங்களிக்க வேண்டும் என்ற ஒரு சிந்தனையில் நாம் இங்கு ஒருமித்துக் கூடியிருக்கின்றோம்.
மன்னாரில் இன்று இவ்வளவு இளைஞர்கள் இங்குக் கூடியிருப்பது மிழ்ச்சியளிக்கிறது, கடந்த காலத்தில் நடந்த தமிழரசுக் கட்சிக் கூட்டங்களில் இவ்வளவு இளைஞர்கள் கலந்து கொண்டிருந்ததை நான் காணவில்லை. இன்று இங்குக் கூடியிருக்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது இவர்கள் தொடர்ந்தும் என்னுடன் பயணிப்பார்கள் என்பது ஐயமில்லை.
பல இடங்களிலிருந்தும் இளைஞர்கள், இந்த இடத்துக்கு வந்துள்ளார்கள். நாம் எமக்குள் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். வன்னி தேர்தல் தொகுதியானது ஒரு பரந்த இடம். மன்னார் , வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைக் கொண்டதே வன்னித் தேர்தல் தொகுதியாகும்.
தேர்தலுக்குக் குறுகிய நாட்களே காணப்படுவதால் நான் எனது சட்டத் தொழிலையும் இடைநிறுத்தி இயன்றளவு உங்கள் ஒவ்வொருவரையும் தேடி வருவதில் என்னை ஈடுபடுத்தி வருகின்றேன். நான் தேர்தலுக்கு வரும்பொழுது எவரிடமும் பணத்தை எதிர்பார்த்து வரவில்லை. ஆனால் மக்களாகிய உங்களை நம்பியே நான் இதில் என்னை அர்ப்பணித்துள்ளேன்” எனத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி செ. டினேசன் தெரிவித்துள்ளார்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்