தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இன்று (10.11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நான் இங்கு உரையாற்றும் முதலாவது சந்திப்பு இதுவாகும். நாங்கள் வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டாலும், நுவரெலியாவில் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.
அப்போதைய காலகாட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்ட போது, ஜே.வி.பி யின் தலைவர் ரோஹண விஜேவீர அதனை கடுமையாக எதிர்த்தார். ஆனால் நாம் அனைவருக்கும் இலங்கை குடியுரிமை வழங்கினோம்” என்றார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், பிரதி தலைவர்களான கணபதி கனகராஜ், அனுஷியா சிவராஜா நோர்வூட், கொட்டகலை, மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்களான ரவி குழந்தைவேல். ராஜமணி பிரசாத், திருமதி.செண்பகவள்ளி, ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கே.கே.பியதாச உள்ளிட்ட மாவட்ட வேட்பாளர்களும் மற்றும் பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.