மாற்றமென்பது பழையவர்களை மீண்டும் வெல்ல வைப்பதல்ல -தவி.கூ சபேசன்.

மாற்றமென்பது பழையவர்களை மீண்டும் வெல்ல வைப்பதல்ல -தவி.கூ சபேசன்.

பழைய அரசியல்வாதிகளை மீண்டும் கொண்டு பதவிக்கு கொண்டு வருவதால் எந்தவொரு மாற்றமும் நிகழாதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் கணேசநாதன் சபேசன் தெரிவித்துள்ளார். அது மாற்றமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் (10.11)ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், மன்னார் தனியார் விடுதியொன்றில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஊழலற்ற ஒரு நல்ல ஜனாதிபதி எமக்குக் கிடைத்துள்ளார். ஆகவே நாமும் அவருடன் சேர்ந்து மாற்றத்துக்காக வேலை செய்யவேண்டும். அந்த வகையில் வன்னித் தேர்தல் தொகுதியில் 9 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளோம்.

“காலம் காலமாக ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தலிலும் பழைய அரசியல்வாதிகள். தான் தொடர்ந்தும். வந்துகொண்டு இருக்கிறார்கள்.”இன்றைக்கு மன்னார் மாவட்டத்தை எடுத்துகொண்டால், அடைக்கலநாதன், ரிஷார்ட், போன்றோர் தொடர்ந்து 20, 30 வருடங்களாகத் தங்களுக்கே எழுதிக் கொடுத்தது போன்று மீண்டும் மீண்டும் பதவிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்”.

“அவர்கள் தாங்கள் செய்யும் சட்டவிரோதத் தொழில்களைக். காப்பாற்றிக் கொள்ளத்தான் இவ்வாறு தங்கள் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்கிறார்களோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.”

“இன்று சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, ரிஷார்ட் பதியுதின் ஆகியோர் தாங்கள் இந்தமுறை தேர்தலில் வென்றால், ஜனாதிபதியுடன் பேசி அமைச்சுப் பதவிகளை எடுப்போமென்று, சொல்லிக் கொள்கிறார்கள். “ஆனால், ஜனாதிபதி கடைசிவரைக்கும் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளைக் கொடுக்கப் போவதில்லை.”

அவர்களுடைய பொய் வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு வாக்களிக்கக் கூடாதென மன்னார் மக்களிடம் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்த சங்கரி,

“மீண்டும் மீண்டும் பாராளுமன்ற உறுபினர்களாக. வந்தவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்?அவர்கள் கையும் சுத்தமில்லை. இதயமும் சுத்தமில்லை.”

“எத்தனையோ கொலைகள் கொள்ளைகள் நடந்துள்ளது.அவற்றை நான் குறிப்பிட விரும்பவில்லை. இப்போது எல்லோரும் உத்தமர்களாகி விட்டார்கள். நான் இன்றுவரை பொய் சொன்னது கிடையாது. களவெடுத்தது கிடையாது.மக்களை ஏமாற்றி லஞ்சம் வாங்கியது கிடையாது. ஆனால் என்னைத் துரோகி என்கிறார்கள்.”

“ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்கள் வரலாறுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும். மக்களுக்குத் தெரியும் இந்த நாட்டிற்குத் துரோகம் இழைத்தவர்கள் யாரென, எனவே மக்கள் சிந்தித்தால் சரியானவர்களைத் தெரிவு செய்வார்களென்றார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் கணேசநாதன் சபேசனால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர்கள், முத்துகிருஷ்ணன் பெருமாள், செல்வதேவா செல்ரன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version