கடந்த முறை தமது கட்சியில் அல்லது கூட்டணியமைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ் கட்சிகள் சில தமது உறுப்பினர்களை இழந்துள்ளது. சில கட்சிகள் முழுமையாக தோல்வியடைந்துள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரண்டு கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அவருடைய கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி எந்த ஆசனத்தையும் வெற்றி பெறவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியோடு கூட்டணியமைத்து இவர்கள் போட்டியிட்டனர். கடந்த இரண்டு தேர்தல்களிலும் கொழும்பில் வெற்றியீட்டிய மனோ, இம்முறை கொழும்பில் தமிழ் பிரதிநித்துவத்தை உறுதி செய்வோம் என ஊடகவியலாளர் லோஷனுடன் இணைந்து போட்டியிட்ட நிலையில் இருவரும் தோல்வியடைந்துள்ளனர்.
கடந்த தேர்தலில் வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு ஆசனங்களை வென்ற டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இம்முறை எந்த ஆசனத்தையும் வெற்றி பெறவில்லை. வன்னியில் குலசிங்கம் திலீபனும் தோல்வியடைந்துள்ளார். 30 வருடங்களின் பின்னர் டக்ளஸ் தோல்வியடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இரண்டு தடவைகள் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வகித்த அங்கஜன் இராமநாதன் தோல்வியடைந்துள்ளார். கண்டியில் தமிழ் முற்போக்கு கூட்டணி மூலம் இரண்டு தடவைகள் வெற்றி பெற்ற வேலுகுமார் இம்முறை கட்சி மாறி புதிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு தோலிவியடைந்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் கடந்த பாரளுமன்ற உறுப்பினர் உதயகுமார் நுவரெலியாவில் தோல்வியடைந்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணி மூலம் கடந்த பாரளுமன்றத்தில் வெற்றி பெற்ற அரவிந்தகுமார் தோல்வியை சந்தித்துள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் பிள்ளையான், மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கோவிந்தம் கருணாகரன் ஆகியோர் தோல்வியை சந்தித்துள்ளனர். தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் யாழ் மாவாட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்நதுள்ளார்.
கட்சி தாவல்களுக்கு பெயர் போன வடிவேல் சுரேஷ் பதுளையில் தோல்வியை சந்தித்துள்ளார். நுவெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மருதுபாண்டி ராமேஸ்வரன் தோல்வியடைந்துள்ளார்.