இனப்பிரச்சினைக்கே முன்னுரிமை – செல்வம் அடைக்கலநாதன்

இனப்பிரச்சினைக்கே முன்னுரிமை - செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொதுப் பிரச்சனைகளை கையாளுகின்ற வகையிலே செயற்பட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (16.11) சனிக்கிழமை, காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இனப்பிரச்சினை குறித்தும்,அபிவிருத்தி தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்துவதாக கோரி மக்களிடம் நாங்கள் வாக்கு சேகரித்தோம்.குறித்த இரு விடையங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுகின்ற ஒரு சாத்தியப்பாட்டை மேற்கொள்கின்ற சூழலை உருவாக்குவதாகவும் நாங்கள் கூறியிருந்தோம்.

கிராமிய ரீதியாக மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கிராமங்களை முன்னேற்றுவதே எமது நோக்கமாக இருக்கும்.மேலும் இனப்பிரச்சினை தொடர்பான விடையங்களில், நாங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயற்படுவதற்கான ஒரு சூழலை உருவாக்குவோம்.

ஜனாதிபதி கூறியது போல் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து,காணாமல் போனவர்கள் குறித்துப் போராட்டத்தினூடாக நீதியை கோரி வருகின்ற உறவுகளுக்கு நியாயம் கிடைக்கின்ற வகையில் ஒரு வழி முறையை நாங்கள் கையாளுகின்ற ஒரு சூழலை உருவாக்குவோம்,எமது நிலங்கள் பறிபோகாகாதவாறு பாதுகாக்கும் நிலையை ஏற்படுத்தி,எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க நட்வடிக்கை எடுப்போம்.

எனவே இம்முறை சங்கு சின்னத்துக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.மக்கள் சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறையை நாங்கள் கையாளுவோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.”

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version