பொறுப்புக்கூறலுடன் மக்கள் பிரதிநிதித்துவ பணியை முன்னெடுக்க வேண்டும் -சஜித்

பொறுப்புக்கூறலுடன் மக்கள் பிரதிநிதித்துவ பணியை முன்னெடுக்க வேண்டும் -சஜித்

திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை வலுப்படுத்திக் கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவத்தின் மூலம் ஆற்றப்படும் சேவைகள் வெளிப்படைத்தன்மையுடன் அமைந்து காணப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

10 ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு இன்று (25.11) பாராளுமன்ற கட்டிட்டத் தொகுதியில் ஆரம்பமானது.

இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“குடிமக்களுக்கு மிக நெருக்கமான வினைதிறனான சேவையை வழங்க வேண்டும். நவீன தொழில்நுட்பம் புதிய வடிவமைப்புகளை உருவாக்கும் இந்த காலகட்டத்தில், தொடர்ந்தும் புதியவை திறந்த பாராளுமன்றம் என்ற எண்ணக்கரு முன்னோக்கிக் கொண்டு செல்லப்பட வேண்டும். இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் பெரும் பங்காற்ற முடியும். கேள்விகளை முன்வைப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகள் மூலம் ஜனநாயகத்தை பாதுகாக்க சந்தர்ப்பம் காணப்படுகிறது.

பாராளுமன்ற தெரிவுக் குழுக்கள், துறைசார் மேற்பார்வை குழுக்கள் ஊடாக பெரும் பணியை ஆற்ற முடியும். கொள்கை வகுப்பாக்கத்துக்கு முக்கிய பங்காற்ற முடியும்.

பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புணர்சியுடன் மக்கள் பிரதிநிதித்துவத்தை வினைதிறனான முறையில் முன்னெடுத்துச் செல்லலாம். இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜனநாயக கட்டமைப்பில் நிறைவேற்றுத்துறை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை ஜனநாயகத்தை பாதுகாக்கும் 3 தூண்களாக அமைந்து காணப்படுகின்றன. சட்டமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், சட்டமியற்றும் முறை மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகின்றனர்.

பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறியது போல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஜனநாயகத்தின் புனித ஸ்தலமாகும், ஆட்சியாளரையும் ஆளப்படுபவர்களையும் இணைக்கும் முக்கிய புள்ளியாகும். ஜவஹர்லால் நேரு கூறியது போல் பாராளுமன்றம் வெறுமனே சட்டங்களை இயற்றும் ஒரு நிறுவனம் மட்டுமல்ல, மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கும் மிக முக்கியமான இடமாகும்.

பாராளுமன்றத்தில் தமது பொறுப்புக்கள், கடமைகள் மற்றும் செயல்முறை குறித்த தேறிய அறிவைப் பெற Erskine May மற்றும் Kaul and Shakdher எனும் இரண்டு புத்தகங்கள் காணப்படுகின்றன.

எனவே இதன் பிரதிகளை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும். இரண்டு புத்தகங்களையும் கவனமாக கற்றறிந்து, பாராளுமன்றக் குழுக்களின் செயல்பாட்டையும், மக்கள் பிரதிநிதித்துவ செயல்முறையையும் வலுப்படுத்தும் புதிய பயணத்தை பொறுப்புடன் ஆரம்பித்து, மக்களுக்கு சிறந்து பணியாற்ற தனது வாழ்த்துக்களையும் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version