இலங்கைக்கு கடின இலக்கு. தென்னாபிரிக்கா விஸ்வரூபம்

இலங்கைக்கு கடின இலக்கு. தென்னாபிரிக்கா விஸ்வரூபம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (27.11) டேர்பனில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. தென்னாபிரிக்கா அணியை சிறந்த பந்துவீச்சு மூலம் இலங்கை அணி கட்டுப்படுத்தியது. ஆனால் தமது துடுப்பாட்டத்தில் மிகவும் மோசமாக செயற்பட்டு 42 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்த டெஸ்ட் வரலாற்றில் இலங்கையின் குறைந்த ஓட்டங்கள் நிலையை தொட்டது. மீண்டும் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி பலமான நிலையில் முன்னேறி 516 ஓட்டங்கள் என்ற வெற்றியிலகை இலங்கை அணிக்கு நிர்ணயித்துள்ளது. இலங்கை அணி இரண்டாம் இன்னிங்சிலும் தடுமாறி வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 516 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடி வரும் இலங்கை அணி 05 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் டினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 25 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 23 ஓட்டங்களையும் பெற்றனர். தனஞ்சய டி சில்வா ஆடுகளத்தில் காணபப்டுகிறார். தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் கிகிஸோ ரபாடா, மார்கோ ஜன்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

தென்னாபிரிக்கா அணி இரண்டாம் இன்னிங்சில் 05 விக்கெட்களை இழந்து 366 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ரிஸ்டன் ஸ்ரப்ஸ் 122 ஓட்டங்களையும், ரெம்பா பவுமா 113 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ராம் 47 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் விஸ்வ பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள். பிரபாத் ஜெயசூரியா டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை கைப்பற்றினார்.

முதல் இன்னிங்சில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றது. இதில் ரெம்பா பவுமா 70 ஓட்டங்களையும், கேஷவ் மஹாராஜ் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். தென்னாபிரிக்கா அணியின் ஆரம்ப விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்டன. அதன் பின்னர் ரெம்பா பவுமா தனி ஆளாக தென்னாபிரிக்கா அணிக்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இறுதி நேரத்தில் கேஷவ் மஹாராஜ் அதிரடியாக துடுப்பாடி ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், பிரபாத் ஜெயசூரிய, விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்சில் துடுப்பாடிய இலங்கை அணி 13.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 42 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதுவே இலங்கை அணியின் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும். துடுப்பாட்டத்தில் கமிண்டு மென்டிஸ் 13 ஓட்டங்களையும், லஹிரு குமார ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 7 ஓட்டங்களையும், பத்தும் நிசங்க 3 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 2 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 1 ஓட்டத்தையும், சந்திமால், குசல் மென்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் ஓட்டங்களை எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் மார்கோ யன்சன் 7 விக்கெட்களையும், ஜெரால்ட் கொட்சியா 2 விக்கெட்களையும், ககிஸோ ரபாடா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version