பரீட்சை கடமைகளுக்கான கொடுப்பனவு குறைப்பு – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

பரீட்சை கடமைகளுக்கான கொடுப்பனவு குறைப்பு - ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை முறையாக வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பரீட்சை ஆணையாளரினால் நேற்று (08) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையினால் போக்குவரத்து கொடுப்பனவுகள் தொடர்பில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாட்களில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறுகின்றன. பரீட்சை ஆணையாளரினால் வழங்கப்பட்ட இரண்டு கடிதங்களால் பரீட்சை ஊழியர்களுக்கு புதிதாக சிக்கல் எழுந்துள்ளது. நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதலாவது கடிதம் வழங்கப்பட்டது.

அந்த கடிதத்தின்படி, பரீட்சை மண்டபத்திலிருந்து பயணிக்கும் தூரம் 10 கிலோமீற்றருக்கு அதிகமாக இருந்தால் 1,000 ரூபா செலுத்த முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் 8ஆம் திகதி பரீட்சை ஆணையாளரால் மற்றொரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி 1,000 ரூபாவாக இருந்த போக்குவரத்து கொடுப்பனவு 500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 முதல் 10 கிலோமீற்றர் இடைப்பட்ட தூரத்திற்காக 750 ரூபா முன்னதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது தற்போது 400 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 முதல் 5 கிலோமீற்றருக்க 500 ரூபாவாக இருந்த நிலையில், தற்போது அது 300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 கிலோமீற்றருக்கு குறைவாக இருந்தால் 300 ரூபா வழங்குவதாகவும், அது தற்போது 200 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பரீட்சை கண்காணிப்பாளருக்கும் கொடுப்பனவு வழங்க வேண்டுமென கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய கடிதமொன்று வௌியிடப்பட்டு இவ்வாறு கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர் என்று தெரிவித்தார்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version