“கிளீன் ஶ்ரீலங்கா ” திட்டம் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே சாத்தியம் – ஜனாதிபதி

"கிளீன் ஶ்ரீலங்கா " திட்டம் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே சாத்தியம் - ஜனாதிபதி

பொது மக்களின் செயலூக்கமான பங்களிப்புடன் மாத்திரமே ” கிளீன் ஶ்ரீலங்கா ” வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

“கிளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (01.12) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

2025 ஆம் ஆண்டுக்குள் ஷ காலடி எடுத்து வைக்கும் இந்த சந்தர்ப்பம் புதிய வருடமொன்றின் ஆரம்பம். புதிய வருடத்தின் உதயம் என்று கூறலாம். எனவே பல தசாப்தங்களாக, எமது நாட்டில் இவ்வாறான பல வருடங்கள் கடந்து சென்றுள்ளன. நாம் நல்ல விடயங்களுக்குள் காலடி வைத்தோமா என்ற கேள்விக்குறி எமக்குள் இருக்கிறது. கடந்த ஒவ்வொரு வருடங்களும் சிறந்த விடயங்களுக்காக புதுப்பித்துக் கொண்டு முன்னோக்கிச் சென்றோமா?இன்றேல் மோசமான விடயங்களை புதுப்பித்து கடந்த காலத்திற்குச் சென்றோமா? என்ற பிரச்சினை எம்முன் உள்ளது.

அதனால் இந்த புத்தாண்டுடன் எமது நாட்டை புதிய மாற்றத்துக்கு உட்படுத்தும் நிரந்தரமான நோக்கம் எமக்கு உள்ளது. அதற்கான கடமையும் பொறுப்பும் எம்மை சார்ந்திருக்கிறது. நானும் எனது அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் அனைத்து அரசியல் தரப்புக்களும் இதற்கான அர்ப்பணிப்பை செய்வோம்.

எமது நாட்டில் புது வருடம் புதியதொரு அரசியல் கலாச்சாரத்துடன் ஆரம்பமாகிறது. இந்த நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் அடித்தளம் இட்டிருக்கிறோம். அரசியல் கலாசாரம், வீண் விரயம், குடும்ப வாரிசுகள், எல்லையை மீறி அதிகாரத்தை பயன்படுத்தல், அதிகாரத்தை மக்களுக்கு எதிராக பயன்படுத்தல், மக்களுக்கு மேலாக இருக்கும் அரசியல்வாதிகளாக இருத்தல் என்ற அனைத்தையும் இல்லாமல் செய்து மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய, மக்களின் தேவையுடன் இசைந்து செல்லக்கூடிய ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். புதிய வருடத்தின் சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய திட்டங்களை நாம் வகுத்திருக்கிறோம்.

கடந்த காலங்களில் எமது பொருளாதாரம் வங்குரோத்தான நிலையில் காணப்பட்டது. தற்போது பொருளாதாரத்தை மேலோட்டமாக பார்க்கும் போது நிலைபேறான தன்மையை உருவாக்கியிருக்கிறோம். கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்திருந்தது. நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், அதிகாரிகள், அரசியல் துறை என்பன பாரிய முயற்சியை மேற்கொண்டதாலேயே அந்த இலக்கை அடைய முடிந்தது. எனவே பொருளாதாரத்தை ஸ்திரமடையச் செய்ய எம்மால் முடிந்திருக்கிறது. அது போதுமானதல்ல. எமது பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் புதியவையாக அமைந்துள்ளன. அதற்காக அரசியல் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்திருக்கிறோம்.

அதேபோன்று எமது நாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல வகையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருந்தது. எமது நாட்டின் பாதுகாப்பை மிகச் சிறப்பாக உறுதிப்படுத்த எம்மால் முடிந்துள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடனும் உறுதியாகவும் கூறுகிறோம். கடந்த வருடத்தில் அறுகம்பையை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் கிடைத்திருந்தது. எமது பொலிஸார், எமது புலனாய்வுத் துறையினர், எமது முப்படையினர் விறுவிறுப்புடன் செயலாற்றி நாட்டின் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்தியுள்ளனர். அதேபோல் நாட்டிற்குள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கான பலமான வேலைத்திட்டம் எமக்கு இருக்கிறது. எமது நாட்டில் நீண்ட காலமாக சட்டத்தின் ஆதிக்கம் கருத்தில்கொள்ளப்படாத நிலைமை காணப்பட்டது.

குறிப்பாக குற்றவாளிகளும் மோசடிக்காரர்களும் சட்டத்துக்கு மேலாக இருக்கும் வகையில் அரசியல் துறை இருந்தது. தனக்கு தேவையான மற்றும் தாம் நினைத்தவாறு சட்டத்தை மீறிச் செல்லும் நிலைமை காணப்பட்டது. அரசியலமைப்பை மீறினர். எமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் அரசியலமைப்பை மீறியிருப்பதாக பல சந்தர்ப்பங்களில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் பிரஜை சட்டத்தின் ஆதிக்கத்தை சிதைக்கும் நாட்டில், சட்ட ஒழுங்கு பற்றி என்ன பேசுவதோ என்பதை கேட்கிறேன். எனவே நாம் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

அதேபோல் எமது நாட்டின் அரச கட்டமைப்பு, அரசியல் கட்டமைப்பு மற்றும் முழு சமூகத்திற்குள்ளும் ஊழல் மோசடி, வீண் விரயம் என்பன பரவியுள்ளன. எமது முழு நாட்டுக்குள்ளும் புற்றுநோயினைப் போல பரவியுள்ளது.

ஊழல் மோசடியை நிறுத்த நாம் பாரிய முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்குள் எமது நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பெரும் பணி உள்ளது. அதற்கான பணியை ஆற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்குமென நம்புகிறேன்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றக் கட்டமைப்புக்கு மீண்டும் எமது நாட்டை ஊழல், மோசடி அற்றதாக மாற்றுவது தொடர்பிலான பணிக்காக அர்ப்பணிக்கும் என்று நம்புகிறோம். அரசியல் அதிகார தரப்பு என்ற வகையில் செயற்பாடுகள் வாயிலாக ஊழலை தடுக்கவும் மோசடியை தடுக்கவும் நாம் முன்மாதிரியாக செயற்படுவோம்.

ஆனால் அரசியல் தரப்பின் முன்னுதாரணமும் தலையீடும் மாத்திரம் போதுமானதல்ல. அதற்கான அரச நிறுவனங்கள் தம்மீதான பொறுப்புக்களை சரியாக புரிந்துகொண்டு அந்த மாற்றத்திற்கு தேவையான உதவி, ஒத்துழைப்புக்களை எமக்கு வழங்குமாறு கோருகிறேன்.

எந்தவொரு வலுவான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும், வலுவான அடித்தளம் அவசியமாகும். எமது நாடும் தேசமும் அத்திவாரம் இழந்த நாடாகும். அடிப்படை இழந்த நாடாகும். அதனால் அதற்கான ஆரம்ப பிரவேசத்தை குறிப்பிடத்தக்க அளவு சாதகமாக நிறைவு செய்திருக்கிறோம். இந்த நாட்டை மீளமைப்பதற்கு தேவையான அத்திவாரம், அடித்தளத்தை அமைக்க வேண்டும்.

அரசியல் அதிகாரம், அரச பொறிமுறை, சட்டத்தின் ஆதிக்கம் என்பவற்றை போலவே அரசியலமைப்பிற்கு மதிப்பளித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் ஊழல்,மோசடிகளை ஒழித்தல் என்பவற்றுக்கான இந்த அத்திவாரம் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல எமக்கு தேவைப்படுகிறது. நாம் மிகத் துரிதமாக திட்டமிடலின் அடிப்படையில் இந்த அத்திவாரத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறோம். எமது பிரஜைகளுக்காக கட்டியெழுப்பப்பட்டுள்ள அத்திவாரத்தின் அடிப்படையில் உருவாகின்ற பெரும் பொருளாதாரத்தின் பலன்கள் பரவலாக சென்றடைய வேண்டும். அதனால் எமது நாட்டில் எமது அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டங்கள் மூன்றும், பிரதான மூன்று நோக்கங்களை மையப்படுத்தி கொண்டுச் செல்லப்படுகிறது. அதன் முதன்மை நோக்கமாக நாட்டையும் நாட்டு மக்களையும் வறுமையில் இருந்து மீட்க வேண்டும் என்பதே காணப்படுகிறது.

கிராமிய மக்கள் வரையில் பொருளாதாரத்தின் பலன்கள் கொண்டுச் செல்வதற்கு தேவையான பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்யும்போது, பொருளாதாரம் மிகச் சிறிய குழுவின் மீது குவிந்திருப்பது சமூகத்திற்குள் ஒருபோதும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவராது. பொருளாதாரம் ஒரு சிறிய குழுவிடம் குவிந்திருப்பது நாட்டிலும் மக்களிடமும் நிலையற்ற தன்மையை உருவாக்கும். எனவே, பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை உருவாக வேண்டுமெனில் பொருளாதாரத்தின் பலன்கள் கிராமிய மக்கள் வரையில் சென்றடைய வேண்டும்.

எனவே, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினை நமது நாட்டில் வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட திசையை நோக்கி நகர்த்தும் ஒரு பொருளாதாரத் வேலைத்திட்டத்தின் ஆரம்பமாக்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். எமது இரண்டாவது இலக்கு இந்த நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதாகும். செயல்திறனற்ற வீண் விரயத்தை குறைத்தல் மற்றும் ஊழல்,மோசடியை

மட்டுப்படுத்தவும் பிரஜைகளுக்கு மிக இலகுவாக அரசாங்கத்துடன் இருக்கின்ற தொடர்பை தொடர்ச்சியாக பேணிக்கொள்ளவும் தேவையான அடித்தளத்தை டிஜிட்டல் மயமாக்கல் உருவாக்கும்.

எமது அடுத்த முக்கிய திட்டம் Clean Sri Lanka. இது சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவது தொடர்பிலானது மட்டுமல்ல. இது முழுமையாக சிதைந்து போயுள்ள சமூகக் கட்டமைப்பினால் அநாதரவான நிலையிலிருக்கும் எமது தாய்நாட்டை மீளமைப்பதற்காக அனைத்துத் துறைகளிலும் செய்யப்படும் தூய்மையாக்கலை காண்பதே எமது நோக்கமாகும்.

நான் சில விடயங்களை எடுத்துக்கூறுகிறேன். அது எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். குறிப்பாக நமது நாடு மிக அழகான சுற்றுச்சூழல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. நமது நாடு மிக முக்கியமான அமைவிடத்தை கொண்டுள்ளது. அது மிக உயர்வான முக்கியத்துவமாகும். எந்தவொரு வெளிநாட்டவரை சந்தித்தாலும், உங்களுக்கு அழகான இலங்கை இருக்கிறது என்றே கூறுவர்.

ஆனால் இந்த இலங்கையில் இன்று என்ன நடந்துள்ளது? சிறந்ததொரு சுற்றுச்சூழல் கட்டமைப்பு உள்ள நாட்டில் 2023ஆம் ஆண்டு யானை – மனித மோதலால் நூற்று எண்பத்திரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2023 ஆம் ஆண்டில் 484 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன. சிறந்த அழகியலுடன் கூடிய சுற்றுச்சூழல் கட்டமைப்பு இருந்தாலும் வருடத்திற்கு 484 யானைகள் இறக்கும் நாடாக இருக்கிறோம்.

யானைகளினால் 182 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பெருமளவானோர் இடப்பெயர்கின்றனர். உயிரிழப்பு, பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்படுத்துகின்றன. எனவே, சுற்றுச்சூழல் கட்டமைப்பை மீளமைப்பதை Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் மிக முக்கியமான அங்கமாக கருத வேண்டும்.

நமது நாட்டுக்கும் நாட்டின் பிரஜைகளுக்கும் புதிய மதிப்புக்கள் மற்றும் புதிய நெறிமுறைகள் அவசியப்படுகின்றன. மிகத் தவறான விடயங்களை நாம் மதிப்பாக புரிந்து கொண்டுள்ளோம். இன்று இந்த சமுதாயத்திற்குள் ஒரு புதிய மதிப்பு கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். இதனை எங்கிருந்து ஆரம்பிப்பது?

முதலில், தமது வாழக்கை பற்றிய தமது மதிப்பு அவசியமாகிறது. நான் நினைக்கும் வகையில் எமது நாட்டில் பெரும்பாலான பிரஜைகளுக்கு தமது வாழ்க்கை தொடர்பில் மதிப்பு கிடையாது ஏன் அவ்வாறு சொல்கிறேன்? கடந்த வருடத்தில் ஐந்நூற்று தொண்ணூற்றைந்து பேர் கடலில் அல்லது நீர்த்தேக்கங்களில் அல்லது கிணற்றில் அல்லது குளத்தில் விழுந்து இறந்துள்ளனர்.நீரில் மூழ்கி ஐந்நூற்று தொண்ணூற்றைந்து பேர் இறந்துள்ளனர் என்பதிலிருந்து என்ன தெரிகிறது? 2321 பேர் விபத்துக்களினால் இறந்துள்ளனர். நாளொன்றுக்கு ஏழு பேர் வாகன விபத்துக்களால் இறக்கும் நாடு
உருவாகியுள்ளது. அதனால் வாழ்வின் மதிப்புக்களை பற்றி அறியாத சமுதாயம், பிறர் வாழ்வு குறித்து அக்கறை இல்லாத சமூகம் உருவாகியிருக்கிறது.

எனவே, இந்த சமூகத்தை மீண்டும் குணப்படுத்த வேண்டும். இந்த சமூகத்தில் புதிய நெறிமுறையும்,புதிய மதிப்பு முறையும் உருவாக்கப்பட வேண்டும். எமது Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ், சமூகத்திற்கு ஒரு புதிய நெறிமுறைக் கட்டமைப்பையும், மதிப்புக் கட்டமைப்பையும் உருவாக்குவோம். வாகன விபத்துகளை குறைக்க வேண்டும். அதற்காக, நான் முதலில் சட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. மக்கள் மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version